புதுவை மாநிலத்தில் தொலை மருத்துவ சேவை திட்டத்தை முதல்வர் வே. நாராயணசாமி வியாழக்கிழமை தொடக்கி வைத்தார்.
புதுவை சுகாதாரத் துறை, ஜி கேர் சர்க்கரை நோய் கவுன்சில் என்ற தன்னார்வ நிறுவனம் இடையே கடந்த ஜூன்
1- ஆம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 40 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 81 தாய் - சேய் நிலையங்கள் என மொத்தமுள்ள 121 இடங்களில் சுகாதார துறையின் முன்னோடித் திட்டமான தொலை மருத்துவ சேவைத் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
இதன் முதல் கட்டமாக, குயவர்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், முதலியார்பேட்டை சுகாதார நிலையம் மற்றும் நெட்டப்பாக்கம் சுகாதார நிலையத்தில் இந்த சேவை வழங்கப்பட உள்ளது.
அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி குயவர்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் வே. நாராயணசாமி, சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் ஆகியோர் பங்கேற்று தொலை மருத்துவ சேவைத் திட்டத்தைத் தொடக்கி வைத்தனர்.
நிகழ்வில் சுகாதாரத் துறை செயலர் பிரசாந்த் குமார் பாண்டா, இயக்குநர் ராமன், தேசிய ஊராக சுகாதார இயக்கக இயக்குநர் மோகன் குமார், குயவர்பாளையம் சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி அஜ்மல், ஜி கேர் சர்க்கரை நோய் கவுன்சில் தலைவர் நந்தகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: புதுவையில் உள்ள அனைத்து சுகாதார நிலையங்கள் மற்றும் தாய் - சேய் நிலையங்களில் தொலை மருத்துவ சேவைத் திட்டம் தொடங்கப்படும். இந்த மையங்களில் முதல் நிலை மருத்துவ சேவைகள், தகுதி வாய்ந்த மருத்துவப் பணியாளர்கள் மூலம் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இலவசமாக வழங்கப்படும்.
உயரம், உடல் எடை, இசிஜி, ரத்த அழுத்தம், கண் பரிசோதனை, காது பரிசோதனை, சர்க்கரை நோய் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை, தோல் பரிசோதனை, ரத்தத்தில் உள்ள கொழுப்பு அளவு, சிறப்பு மருத்துவர்களிடம் தொலை மருத்துவ ஆலோசனை உள்ளிட்ட பரிசோதனைகள் அனைத்தும் இலவசமாகவே மேற்கொள்ளப்படும்.
மேலும், இந்த மையங்களில் சிகிச்சை பெறுபவர்கள் தகுதி வாய்ந்த மருத்துவரிடம் காணொலி மூலம் தொடர்பு கொண்டு அவர்களது நோய் குறித்த விவரங்களைக் கூறி மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருந்துகளைப் பெறலாம். வீட்டில் அவசர மருத்துவ சேவை தேவைப்படுவோருக்கும் இந்த மையங்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்படும். பொதுமக்கள் அவர்களுக்கு வசதியான நேரங்களில் மருத்துவ சேவைகளைப் பெறலாம் என்றனர் அவர்கள்.