புதுச்சேரி

அரசின் சிறந்த செயல்பாட்டுக்கு ஆளுநரின் பாராட்டே சாட்சி: முதல்வர் நாராயணசாமி

30th Aug 2019 08:46 AM

ADVERTISEMENT

புதுவை அரசின் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது என்பதற்கு துணைநிலை ஆளுநர் கிரண் பேடியின் பாராட்டே சாட்சியாக உள்ளது என புதுவை முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.
புதுவை சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது வியாழக்கிழமை பதிலளித்து முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:
 மத்திய அரசில் இருந்து ரூ. 1,500 கோடி மானியமாக கிடைக்கிறது. ஆனால், மத்திய அரசின் வருமானம் 3 சதவீதம் என்றால், நமக்குக் கிடைப்பது 0.21 சதவீதம்தான். 
இதுவே மாநிலமாக இருந்தால் நமக்கு கிடைக்க வேண்டிய தொகை ரூ. 2,500 கோடியாக இருக்கும். புதுவை மாநிலத்தின் 
வருவாயை மத்திய அரசு எடுத்துக் கொள்கிறது.
மத்திய நிதிக் குழுவில் புதுவையைச் சேர்க்க வேண்டும்.  அதற்கு தற்போது சாதகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது பிரிக்கப்பட்ட ஜம்மு - காஷ்மீரை 
15-ஆவது மத்திய நிதிக் குழுவில் சேர்த்துள்ளனர். 
அதைக் கருத்தில் கொண்டு அந்த நிதிக் குழுவின் தலைவர் எம்.கே.சிங்கை சந்தித்து மனு அளித்தோம். இதுதொடர்பாக மத்திய அரசையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்த பட்ஜெட்டை முழுமையாகப் படித்துப் பார்த்தால் எந்த அளவுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது தெரியும். அனைத்து துறைகளுக்கும் முடிந்த அளவு நிதியை ஒதுக்கி இருக்கிறோம். ரூ. 19 கோடி வரை நிதி ஒதுக்க முதல்வருக்கு அதிகாரம் உண்டு. 
அதற்கு மேல் ஒதுக்க வேண்டும் என்றால், ஆளுநரிடம் அனுமதி பெற வேண்டும். 
ஆளுநருக்கு கோப்பை அனுப்பினால், அவர் அதை தில்லிக்கு அனுப்புவார். அதற்குப் பதிலேதும் வராது.
அதிலிருந்து தற்போது இலவச அரிசிக்கு மட்டும் விலக்கு பெறப்பட்டுள்ளது. முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு உதவித் தொகைகள் மாதந்தோறும் அளித்து வருகிறோம். கடந்த காலங்களைவிட, ஜிஎஸ்டி வந்த பிறகு 40 சதவீதம் வரி வருவாய் குறைந்துள்ளது. 
சமூக நலத் திட்டங்களைப் பொறுத்தவரை புதிதாகத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசின் உதவியின்றி எதுவும் செய்ய முடியாது.
ஊசுட்டேரியில் இருந்து குடிநீரைக் கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது நீதிமன்றம் மூலம் தடை ஆணை பெற்றுள்ளனர். ஆசிரியர், மின் துறை அதிகாரிகள் நியமனம், காவல் துறை அதிகாரிகள் நியமனம் ஆகியவற்றுக்காக அமைச்சர்கள், அதிகாரிகளை அழைத்துப் பேசி உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
மாநிலத்தின் நிதி நிலைமை சீராக உள்ளது. அனைத்து நிர்வாக காரணங்கள் மற்றும் போதிய நிதி ஆதாரங்கள் இல்லாத நிலையிலும், அனைத்து துறைகளிலும் சரியான திட்டமிடலுடன் நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறோம். மேலும், நிதி ஆதாரங்கள் முறையாகச் செலவு செய்யப்படுவதால், மாநிலத்தின் நிதி நிலைமை சீராக உள்ளது. அனைத்து நிதி குறியீடுகளும் பரிந்துரைக்கப்பட்ட வரம்புகள் உள்ளன
மக்களின் வளர்ச்சி மற்றும் நலன்களைப் பேணிக் காக்க செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், செயல்படுத்தப்பட உள்ள பல்வேறு நலத் திட்டங்கள் மற்றும் கொள்கைகளை இந்த அரசு உறுதியுடன் முன்னெடுத்துச் சென்று புதுவையின் ஒட்டுமொத்த வளர்ச்சியை புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்லும். 
புதுவை அரசின் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது என்பதற்கு ஆளுநர் உரையின் கடைசி பத்தியில் இருக்கும் பாராட்டைப் படித்துப் பார்த்தாலே தெரியும் என்றார் முதல்வர் நாராயணசாமி.

ADVERTISEMENT
ADVERTISEMENT