புதுவை அரசின் பட்ஜெட் வெற்று அறிவிப்பு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருத்துத் தெரிவித்தது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் புதுவை மாநிலக் குழுச் செயலர் ஆர்.ராஜாங்கம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
புதுவை சட்டப் பேரவையில் முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்துள்ள நான்காவது பட்ஜெட் வளர்ச்சித் திட்டங்கள் இல்லாத சமாளிப்பு மற்றும் வெறும் அறிவிப்பு பட்ஜெட்டாகவே அமைந்துள்ளது.
மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கு சரியான நிதிக்கொள்கையும், துல்லியமான வருவாய் மற்றும்
செலவின மதிப்பீடும் அவசியமாகும். அத்தகைய தன்மையில் பட்ஜெட் அமையவில்லை.
கல்வி, சுகாதாரம், விவசாயம் போன்ற துறைகளுக்கு மிகக் குறைவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய வளர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை.
ரூ.7,000 கோடிக்கு மேல் மாநிலத்தின் கடன் உயர்ந்துள்ளது. ஏற்கெனவே வாங்கிய கடனுக்காக நிகழாண்டில் ரூ.1,550 கோடி செலுத்த வேண்டியுள்ளது. நிகழாண்டில் புதிய கடனாக ரூ.1,100 கோடியாக இருக்கும் என பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தின் கடன் மேலும் அதிகரிக்கும்.
மாநில அரசு நிதி வருவாயை திரட்டுவதற்கும், நிதி நெருக்கடியை சமாளிப்பதற்கும் நேரடி உத்தரவாக, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் குப்பை வரி, பாதாள சாக்கடை வரி, வீட்டு வரி, குடிநீர் வரி என புதிய வரி உயர்வுகளும், மேலும் பேருந்துக் கட்டண உயர்வு, மும்மடங்கு மின் கட்டண உயர்வு என பட்ஜெட்டுக்கு முன்பாக அனைத்தையும் உயர்த்திவிட்டு வரி இல்லா பட்ஜெட் என கூறுவது ஏற்புடையது அல்ல எனத் தெரிவித்துள்ளார்.