புதுச்சேரி

பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரிக்கை

28th Aug 2019 08:47 AM

ADVERTISEMENT

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என புதுச்சேரி மாநில பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பினர் முதல்வர் வே.நாராயணசாமியிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து அந்தக் கூட்டமைப்பின் தலைவர் செந்தில்குமார் தலைமையிலான நிர்வாகிகள், புதுவை சட்டப் பேரவையில் முதல்வர் நாராயணசாமியை செவ்வாய்க்கிழமை சந்தித்து அளித்த மனு விவரம்:  புதுவை மாநிலத்தில் பால் உற்பத்தியாளர்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கான பராமரிப்பு செலவு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. குறிப்பாக, தீவனங்களின் விலையேற்றம், தகுந்த தீவனங்கள் கிடைக்காதது ஆகியவற்றால் தற்போது கால்நடைகளை வளர்ப்பது கடினமாக உள்ளது. கடந்த காலங்களில் கால்நடைத் துறை மூலம் தீவனங்கள் வழங்கப்பட்டதுடன், தடுப்பூசிகளும் போடப்பட்டதால், கால்நடைகளை வளர்ப்பதில் ஏற்பட்ட சிரமம் குறைந்திருந்தது. தற்போது பால் உற்பத்தியாளர்களுக்கு தேவையான தரமான தீவனங்கள், தடுப்பூசிகள், கால்நடைகளை பராமரிக்கத் தேவையான வங்கிக்கடன் வசதிகள் போதுமான அளவில் ஏற்படுத்தித் தரப்படவில்லை. ஆந்திரம், கர்நாடகம், கேரளம் மற்றும் தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு தேவையான தீவனங்கள், மருந்துகளை மானிய விலையில் வழங்குவதுடன், பால் கொள்முதல் விலையையும் உயர்த்தியுள்ளனர். இதனால் அந்த மாநிலங்களில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் தங்கள் தொழிலை அபிவிருத்தி செய்கின்றனர். புதுவை மாநிலத்தில் அந்த நிலை இல்லை. எனவே, புதுவை முதல்வர் கால்நடை வளர்ப்போரை ஊக்குவிக்கும் வகையில், கடந்த காலங்களில் கால்நடைகளுக்கு வழங்கப்பட்டதுபோல, தரமான தீவனத்தை மானியத்தில் வழங்கவும், தகுந்த காலங்களில் சினை ஊசிகள், தரமான மருந்துகள் கிடைக்கவும் நடவடிக்கை எடுப்பதுடன், மற்ற மாநிலங்களைப் போல புதுவையிலும் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT