உலக பாட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்துவுக்கு புதுவை சட்டப் பேரவையில் முதல்வர் வே.நாராயணசாமி செவ்வாய்க்கிழமை வாழ்த்துத் தெரிவித்தார்.
இதுகுறித்து சட்டப் பேரவையில் அவர் பேசியதாவது: பாட்மிண்டன் வீரர் பி.வி.சிந்து கடந்த 25-ஆம் தேதி உலக பாட்மிண்டன் சாம்பியன் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் வென்றதன் மூலம், அந்தப் போட்டியில் வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும், அந்தப் போட்டியில் 5 பதக்கங்களை வென்ற இரண்டாவது பெண்மணி என்ற பெருமையையும் சேர்த்து பெற்றிருக்கிறார். இது, நமக்கெல்லாம் மகிழ்ச்சியையும், பெருமையையும் அளிக்கக்கூடிய ஒன்றாகும்.
பல்வேறு சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்ற அவர், கடந்த 2016-இல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று வெள்ளிப்பதக்கம் வென்று முத்திரை பதித்தார். இந்திய அளவில் விளையாட்டுத் துறையில் சாதனை படைத்ததற்காக, 2013-இல் அர்ஜூனா விருதும்,
2015-இல் இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதும், 2016-இல் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதும் பெற்ற பெருமைக்குரியவர் பி.வி.சிந்து.
இவ்வளவு பெருமைகளைப் பெற்ற அவர், கடந்த
2010-இல் புதுவை மாநிலம் ஏனாம் பகுதியில் உள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி சர்வதேச உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பாட்மிண்டன் போட்டியில் பங்கேற்று ஜூனியர் நேஷனல் பாட்மிண்டன் சாம்பியன் பட்டத்தை வென்றவர் என்பது நமக்கெல்லாம் பெருமை தரக்கூடிய ஒன்றாகும். எனவே, சிந்துவுக்கும், புதுவைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
பி.வி.சிந்து மேலும் பல விருதுகள், பட்டங்களை வென்று நாட்டுக்கு புகழ் சேர்க்க வேண்டும் என்று என் சார்பாகவும், இந்த பேரவையின் சார்பாகவும் வாழ்த்துகிறேன் என்றார் முதல்வர் நாராயணசாமி.