தனி மணல் குவாரி அமைக்க வலியுறுத்தி, புதுச்சேரி பிரதேச மாட்டுவண்டித் தொழிலாளர்கள் சங்கம் (சிஐடியூ) சார்பில், திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள குடிசை மாற்று அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு அந்தச் சங்கத்தின் சிஐடியூ நிர்வாகி முருகன் தலைமை வகித்தார். கெளரவத் தலைவர் முருகன், பொருளாளர் பாபுராஜ் ஆகியோர் உரையாற்றினர்.
இதில், புதுவை முதல்வர் உத்தரவிட்டும் மாட்டுவண்டிக்கு தனியாக மணல் குவாரி அமைக்காமல் காலம் கடத்தும் குடிசை மாற்று வாரியத்தைக் கண்டித்தும், உடனடியாக மணல் குவாரி அமைத்துத் தரக் கோரியும் முழக்கமிட்டனர்.
தொடர்ந்து, மாட்டுவண்டித் தொழிலாளர்களை குற்றவாளிகளைப் போல கைது செய்து, சிறையிலடைப்பதைக் கைவிட வேண்டும், மாட்டுவண்டித் தொழிலாளர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும், மாட்டுவண்டித் தொழிலை அங்கீகரிப்பதுடன், வேலையில்லா காலத்துக்கான நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. போராட்டத்தில் திரளான மாட்டுவண்டித் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.