புதுவையில் இட ஒதுக்கீட்டு அளவை 69 சதவீதமாக உயர்த்தக் கோரிக்கை

புதுவையில் இட ஒதுக்கீட்டு அளவை 50-இல் இருந்து 69 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று, அதிமுக மாநில இணைச்

புதுவையில் இட ஒதுக்கீட்டு அளவை 50-இல் இருந்து 69 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று, அதிமுக மாநில இணைச் செயலரும், முன்னாள் எம்.பி.யுமான பேராசிரியர் மு.ராமதாஸ் கோரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: யாரும் எதிர்பார்க்காத நிலையில் புதுவை முதல்வர் பொருளாதார அடிப்படையில் மருத்துவக் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியுள்ளது, இட ஒதுக்கீடு கொள்கையை மறு சீராய்வதற்கான அவசியத்தை அளிக்கிறது. 
இந்த இட ஒதுக்கீட்டினால், இதர பிற்படுத்தப்பட்டோரைவிட குறைந்த மதிப்பெண் பெற்ற முன்னேறிய வகுப்பினருக்கு படிப்பதற்கும், வேலைவாய்ப்புக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதுதான் சமூகநீதிக் கொள்கையின் ஆணி வேரைப் பறிப்பதாக உள்ளது.
புதுவையில் 1954-க்குப் பிறகு ஆதிதிராவிடர்களுக்கு மட்டுமே கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. 
இங்குள்ள இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பில் 1990-இல் மத்திய அரசு மண்டல் குழுவின் ஆலோசனைகளை செயல்படுத்தியபோது, இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இவர்களுக்கு கல்வியில் இட ஒதுக்கீட்டை மன்மோகன் சிங் அரசு 2005-ஆம் ஆண்டில்தான்   51 ஆண்டுகளுக்குப் பிறகு அளித்தது.
இந்த நிலையில்,  90 சதவீதம் உள்ள அடித்தளமக்களுக்கு அதிகபட்சமாக 50 சதவீதம் இட ஒதுக்கீடு அளிப்பது சரியான சமூக நீதியாகஇருக்க முடியாது.
மொத்த மக்கள் தொகையில் ஒவ்வொரு பிரிவினரின் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு அளிப்பது தான் சிறந்தசமூக நீதிக் கொள்கையாக இருக்க முடியும்.  இன்றைய சூழ்நிலையில் இது சாத்தியப்படாது. 
ஆனால், 50 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழகத்தில் உள்ளதுபோல, 69 சதவீதமாக மாற்றுவது சாத்தியமானதே.
ஏனெனில், பொருளாதார இட ஒதுக்கீட்டை அமல்படுத்திய பிறகு மத்திய அரசே 50 சதவீத இட ஒதுக்கீடு என்ற உச்சவரம்பை மீறிவிட்டது. சத்தீஸ்கரில் 71 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. எனவே, புதுவை அரசு வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரில் இட ஒதுக்கீட்டின் அளவை 50-இல் இருந்து 69 சதவீதமாக உயர்த்தி வழங்கி, இந்திய அரசியலமைப்பின் 9-ஆவது அட்டவணையில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com