புதுச்சேரி

தவறு செய்தால் இயற்கை நிச்சயம் தண்டிக்கும்: புதுவை ஆளுநர் கிரண் பேடி

23rd Aug 2019 08:01 AM

ADVERTISEMENT

தவறு செய்தால் இயற்கை நிச்சயம் தண்டிக்கும் என்று, புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார்.
புதுச்சேரியில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இதனால், மழைநீர் வடிகால் வாய்க்கால்களில் நீரோட்டத்தை ஆளுநர் கிரண் பேடி வியாழக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
கருவடிக்குப்பம் வாய்க்காலை தனியார் உணவகம் அருகிலும், கோரிமேடு வாய்க்காலை கொக்கு பூங்கா அருகிலும் ஆய்வு செய்தார். மேலும், மோகன் நகர் வாய்க்கால், ஜெயா நகர் மேட்டுவாய்க்கால், எல்லைப்பிள்ளைச் சாவடி பவழன் நகர், நெல்லித்தோப்பு சந்திப்புப் பகுதிகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, மழைநீர் தேங்காமல் இருப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, அரவிந்தர் ஆசிரமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுவை அரசு நிர்வாகத்தில் ஆளுநர் அதிகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. அந்த வழக்கு செப்டம்பர் 4-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
ப.சிதம்பரம் மத்திய நிதி, உள் துறை அமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார். ஆதாரம் இல்லாமல் சிபிஐ எந்தவித நடவடிக்கையும் எடுக்காது.
இதில் இருந்து வலிமையான பாடத்தை நாம் கற்கிறோம். தலைமைப் பண்பு என்பது பதவி கிடையாது, அது ஒரு பொறுப்பு. 
அதில், வெளிப்படைத்தன்மை மற்றும் மக்களுக்கான நலன் இருக்க வேண்டும். தவறு செய்தால் இயற்கை தண்டிக்கும்.  அதுபோல, நன்மை செய்தாலும் அதற்கான வெகுமதியை தானாகவே வழங்கும் என்றார் அவர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT