புதுச்சேரி

மக்கள் விரும்பும் துறையாக காவல் துறை விளங்க வேண்டும்: புதுவை டி.ஜி.பி.

18th Aug 2019 03:20 AM

ADVERTISEMENT


மக்கள் விரும்பும் துறையாக காவல் துறை விளங்குவதற்கேற்ப அதிகாரிகள், காவலர்கள் செயல்பாடு அமைய வேண்டும் என புதுச்சேரி டிஜிபி பாலாஜி ஸ்ரீவத்சவா அறிவுறுத்தினார்.
புதுச்சேரி மாநில டிஜிபியாக இருந்த சுந்தரி நந்தா புதுதில்லிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், பாலாஜி ஸ்ரீவத்சவா டிஜிபியாக அண்மையில் நியமிக்கப்பட்டார். 
புதுச்சேரியில் அவர்  பொறுப்பேற்றுக் கொண்ட பின் முதல் முறையாக வெள்ளிக்கிழமை காரைக்கால் வந்தார். முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல்துறை அதிகாரிகளிடம் சுமார் 3 மணி நேரம் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர், செய்தியாளர்கள் அவரை அணுகியபோது, சந்திப்பைத் தவிர்த்துவிட்டார்.
இரண்டாம் நாளான சனிக்கிழமை காரைக்கால் தனியார் துறைமுகத்துக்குச் சென்றார். துறைமுக தலைமை நிர்வாக செயல் அதிகாரி விஜய் நிகோடமஸ், உதவி துணைத் தலைவர் ராஜேஷ்வர் ரெட்டி உள்ளிட்ட துறைமுக அதிகாரிகளுடன், துறைமுகத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து படகில் கப்பலில் சிறிது தூரம் பயணித்துவிட்டு டிஜிபி துறைமுகம் திரும்பினார். இதுகுறித்து காவல் அதிகாரிகள் வட்டாரத்தினர் தெரிவித்தது:
காரைக்கால் காவல்துறையை பல்வேறு நிலைகளில் மேம்படுத்துவது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக ஆள் பற்றாக்குறை, வெடிகுண்டு கண்டறிதல், மோப்ப நாய் போன்றவற்றுக்கு தமிழகத்தையும், புதுச்சேரி பிராந்தியத்தையும் சார்ந்திருக்கும் நிலை, சிறப்பு அதிரடிப்படைக்கு கூடுதல் காவலர்கள், அதிகாரம் குறித்தும் பேசப்பட்டது. டிஜிபி பேசும்போது, காவல்துறை என்பது மக்கள் விரும்பக்கூடிய துறையாக இருக்க வேண்டும். அதற்கேற்றார்போல காவல் அதிகாரிகள், காவலர்களின் பணிகள் இருக்கவேண்டும். குறிப்பாக மக்கள் புகார் தெரிவிக்க வரும்போதும், விசாரணை செய்யும்போதும் காவல்துறையினர் மரியாதையாக நடத்த வேண்டும். புகார்களை பதிவு செய்து, நடுநிலையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 
காவல்துறையை மேம்படுத்துவது குறித்து உயர்மட்ட அளவில் ஆலோசனை நடத்தி தீர்வு காண்பதாக தெரிவித்தார். துறைமுகத்தைப் பொருத்தவரை, கடலோரப் பாதுகாப்புக்கு புதுச்சேரி, காரைக்காலில் மிகுந்த முக்கியத்துவம்  தரவேண்டியுள்ளது. துறைமுகம் காரைக்காலில் உள்ளதால், ஊடுருவலுக்கு வாய்ப்பிருக்கிறது. இதனை துறைமுக நிர்வாகம் முறையாக கண்காணித்து காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும். துறைமுகத்தின் சமூக பொறுப்புணர்வுத் திட்ட நிதியில் காவல்துறைக்கு ரோந்துப் படகு வாங்கித்தந்தால், காவல்துறையினர் சிறப்பு கவனம் செலுத்துவார்கள்.
சுற்றுச்சூழல் மாசு இன்றியும், கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு இல்லாத வகையிலும் கப்பல்கள் இயக்கம் இருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு டிஜிபி அறிவுறுத்தியதாக தெரிவித்தனர்.
மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் பன்வால், மண்டல காவல் கண்காணிப்பாளர்கள் மாரிமுத்து, வீரவல்லபன் உள்ளிட்ட அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT