புதுச்சேரி

சுதந்திர தின விழா: சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது

16th Aug 2019 09:23 AM

ADVERTISEMENT

புதுவையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு சுதந்திர தினவிழாவையொட்டி, விருது, பதக்கம் வழங்கப்பட்டது.
புதுச்சேரி உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில், பதக்கம், விருதுகளை புதுவை முதல்வர் வே.நாராயணசாமி வழங்கினார்.
காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய உதவி ஆய்வாளர் ஜானகி, உதவி துணை ஆய்வாளர் ரிச்சர்ட் ஆகியோர் 2019-ஆம் ஆண்டு குடியரசுத் தலைவரின் சிறந்த காவல் சேவைக்கான விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு முதல்வர் நாராயணசாமி விருது வழங்கினார். பின்னர், காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய போலீஸாருக்கு விருதுகள், பதங்கங்களை முதல்வர் வழங்கினார்.
காவல் கண்காணிப்பாளர் 
ரங்கநாதன், உதவி ஆய்வாளர் ஜெயபாலன் ஆகியோருக்கு குடியரசுத் தலைவரின் சிறந்த காவல் விருது வழங்கப்பட்டது. தலைமைக் காவலர் ஜெயப்பிரகாஷுக்கு முதல்வரின் காவல் பதக்கம் வழங்கப்பட்டது. சிறப்பான பணிக்கான ராஜீவ் காந்தி காவல் பதக்கம் 20 காவலர்களுக்கு வழங்கப்பட்டது.
சிறந்த காவல் நிலையம்: 
2018-ஆம் ஆண்டுக்கான தலைமைச் செயலரின் சிறந்த காவல் நிலையமாக டிஆர் பட்டினம் காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விருதை டிஆர் பட்டினம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பெருமாள் பெற்றுக்கொண்டார். தேசிய அளவில் 2018-ஆம் ஆண்டுக்கான 4-ஆவது சிறந்த காவல் நிலையமாக இடம்பிடித்த நெட்டப்பாக்கம் காவல் நிலைய அதிகாரிகளுக்கான முதல்வரின் பாராட்டுச் சான்று மற்றும் ரொக்கப் பரிசு காவல் நிலையத்தில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகள், காவலர்களுக்கு வழங்கப்பட்டன.
3 ஆண்டுகளாக கண்டுபிடிக்கப்படாத முத்தியால்பேட்டை பெண், அவரது தாய் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியை கைது செய்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸாருக்கு பாராட்டுச் சான்று வழங்கப்பட்டது. சிறந்த சேவைக்கான முதல்வரின் பாராட்டுச் சான்று பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளி முதல்வர் பாஸ்கல் ராஜிக்கு வழங்கப்பட்டது.
சுற்றுச்சூழல் விருது மற்றும் 
பரிசுத் தொகையை புதுச்சேரி சுற்றுச்சூழல் மற்றும் சதுப்புநிலக் காடுகள் பாதுகாப்பு அபிவிருத்தி சங்கத் தலைவர் செல்வமணிகண்டன் பெற்றார். பசுமை விருது சேதராப்பட்டு ஈட்டன் பவர் குவாலிட்டி பிரைவேட் லிமிடெட்  நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.
தேசிய மாணவர் படையினருக்கு முதல்வரின் தங்கப் பதக்கம், கல்வி அமைச்சரின் வெள்ளிப் பதக்கம், கல்விச் செயலரின் வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டன. அதேபோல, சுகாதாரம் மற்றும் குடும்ப நலப் பணிகள் துறையின் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சிறந்த சுகாதார களப்பணியாளர்களுக்கான விருது 22 பேருக்கு வழங்கப்பட்டது.
தொடர்ந்து, காவல் துறை, தீயணைப்புத் துறை, தேசிய மாணவர் படை மற்றும் பல்வேறு பள்ளி மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு நடைபெற்றது. கர்நாடகம், அஸ்ஸாம், ஒடிஸா, ஆந்திரம், ஹரியாணா, ஜார்க்கண்ட், தெலங்கானா, குஜராத் மாநிலங்களைச் சேர்ந்த கலைக் குழுவினரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து, சிறந்த அணி
வகுப்பு மற்றும் சிறந்த கலை நிகழ்ச்சிகளுக்கான பரிசுகளை முதல்வர் நாராயணசாமி வழங்கினார்.
இறுதியில் தேசிய கீதத்துடன் விழா நிறைவு பெற்றது.  சுதந்திர தினத்தையொட்டி, உப்பளம் மைதானத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விழாவில், சட்டப் பேரவைத் தலைவர் வே.பொ.சிவக்கொழுந்து, அமைச்சர்கள் ஆ.நமச்சிவாயம், மு.கந்தசாமி, எம்.எல்.ஏ.க்கள் ஆர்.கே.ஆர்.அனந்தராமன்,  ஜெயமூர்த்தி, விஜயவேணி, இரா.சிவா, வெங்கசேடன், சங்கர், புதுவை அரசின் சிறப்பு பிரதிநிதி ஏ.ஜான்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT