புதுச்சேரி

கோயில் திருவிழாவில் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியைப் பறித்த பெண் கைது

11th Aug 2019 03:22 AM

ADVERTISEMENT


புதுச்சேரி அருகே கோயில் திருவிழாவில் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியைப் பறித்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
முத்தியால்பேட்டையைச் சேர்ந்தவர் பொன்னி (65). இவர், வெள்ளிக்கிழமை அந்தப் பகுதியில் அமைந்துள்ள திரெளபதியம்மன் கோயில் திருவிழாவில் கலந்து கொண்டார். அப்போது, அன்னதானம் வாங்குவதற்காக சென்ற அவரைப் பின்தொடர்ந்து சென்ற பெண் ஒருவர், பொன்னி அணிந்திருந்த 8 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றார்.
இதுகுறித்து, பொன்னி அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாரிடம் தெரிவித்தார். இதையடுத்து, முத்தியால்பேட்டை போலீஸார் 
அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், பொன்னி சுட்டிக் காட்டிய பெண்ணை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். இதில், அவர் நகையைப் பறித்ததை ஒப்புக் கொண்டார்.
விசாரணையில், அவர் கோவையைச் சேர்ந்த ராஜாவின் மனைவி மதி (26) என்பது தெரிய வந்தது. அவரிடம் நடத்திய சோதனையில் பொன்னியிடம் பறித்த நகை உள்பட ரூ. 1.4 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் இருப்பது தெரிய வந்தது. 
தங்க நகைகளைப் பறிமுதல் செய்த போலீஸார் மதியை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவான அவரது கூட்டாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT