அன்றாட செய்திகளைத் தெரிந்து கொள்ளும் வகையில், காவல் நிலையங்களில் தொலைக்காட்சிப் பெட்டி வைக்க வேண்டும் என காவல் கண்காணிப்பாளர் ரங்கநாதன் உத்தரவிட்டார்.
புதுச்சேரி வில்லியனூரில் காவல் துறை தெற்குப் பிரிவு சரகத்துக்கு உள்பட்ட காட்டேரிக்குப்பம், திருபுவனை, நெட்டப்பாக்கம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வில்லியனூர் தனியார் மண்டபத்தில் சனிக்கழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் காவல் கண்காணிப்பாளர் ரங்கநாதன் பேசியதாவது: சிறு சிறு குற்றங்களைக்கூட போலீஸார் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். கஞ்சா விற்பனை புகார்களை உடனடியாக விசாரித்து கண்காணிக்க வேண்டும். இரு சக்கர
வாகனங்களை ஓட்டும் காவலர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்.
இரு சக்கர வாகனத்தில் 3 பேருக்கு மேல் பயணம் செய்வோர்களை எச்சரிக்க வேண்டும். அனைத்துக் காவலர்களும் கட்டாயம் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கிராமங்களில் உள்ள காவலர் குடியிருப்புகளை காவலர்கள் பயன்படுத்த வேண்டும்.
அன்றாட நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ள ஏதுவாக காவல் நிலையங்களில் தொலைக்காட்சிப் பெட்டி வைக்க வேண்டும்.
வணிகர்கள், வியாபாரிகள், பொதுமக்களை அழைத்து குறைகேட்புக் கூட்டத்தை நடத்த வேண்டும். மழைக் காலங்களில் மழை அங்கி அணிய வேண்டும். நெட்டப்பாக்கம் காவல் நிலையம் தேசிய அளவில் 4-ஆவது சிறந்த காவல் நிலையமாகத் தேர்வு செய்யப்பட்டதால், அங்குள்ள அனைத்துக் காவலர்களுக்கும் விருது வழங்கப்படும் என்றார் அவர்.
இந்தக் கூட்டத்தில் காவல் ஆய்வாளர்கள் பழனிவேல் (வில்லியனூர்), கலைச்செல்வன் (திருபுவனை), ராஜ்குமார் (திருக்கனூர்), காவல் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட போலீஸார் கலந்து கொண்டனர்.