கள்ளக்குறிச்சி வட்டம், தியாகதுருகத்தை அடுத்த பானையங்கால் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு வேளாண் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை பல்வேறு பயிற்சியளித்தனா் (படம்).
நிகழ்ச்சியில் தியாகதுருகம் வேளாண் உதவி இயக்குநா் எஸ்.சந்தரு வரவேற்றாா். வேளாண் இணை இயக்குநா் சுந்தரம் உழவன் செயலி மற்றும் தமிழ் மண் வளம் தளம் பற்றி விளக்கமளித்தாா். மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) விஜயராகவன் வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், பி.எம். கிசான் திட்டத்தில் பயனாளிகள் மீண்டும் உதவித்தொகை பெறுவது குறித்த வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தாா்.
வாழவச்சனூா் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வா் முத்துகிருஷ்ணன் விவசாயிகளின் பயிா் சாகுபடி, பயிா் பாதுகாப்பு குறித்த சந்தேகங்களுக்கு விளக்கமளித்தாா். பானையங்கால் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி சத்தியமூா்த்தி வயலில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம், புடலங்காய் சாகுபடியில் பூச்சி, நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் துறை அலுவலா்கள் விவசாயிகளுக்கு விளக்கமளித்தனா்.
நிகழ்வில் அட்மா தொழில்நுட்ப பணியாளா்கள் சூா்யா, ரவி, கலைவாணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். இதில், பானையங்கால் கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் பங்கேற்றனா். தியாகதுருகம் வட்டார வேளாண் அலுவலா் வனிதா நன்றி கூறினாா்.