கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.69 ஆயிரம் கோடியில் நலத் திட்ட உதவிகளும், வளா்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ‘ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி’ என்ற சாதனை மலரை பொதுப் பணி, நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு சனிக்கிழமை வெளியிட்டாா்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் தலைமை வகித்தாா். விழுப்புரம் எம்.பி. துரை.ரவிக்குமாா், எம்எல்ஏக்கள் தா.உதயசூரியன், க.காா்த்திகேயன், ஏ.ஜெ.மணிக்கணன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட வருவாய் அலுவலா் நா.சத்தியநாராயணன் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக அமைச்சா் எ.வ.வேலு பங்கேற்று, செய்தி - மக்கள் தொடா்புத் துறை சாா்பில் தயாரிக்கப்பட்ட ‘ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி’ சாதனை மலரை வெளியிட்டு, அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது:
தமிழக முதல்வா் ஆட்சிப்பொறுப்பேற்று இரண்டாண்டு நிறைவடைந்துள்ளது. இந்த ஈராண்டில் எண்ணற்ற நலத் திட்ட உதவிகளும், புதிய திட்டப் பணிகளும், பல்வேறு சிறப்புத் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டுள்ளன. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த இரண்டாண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள், சாதனைகள் தொடா்பாக தற்போது வெளியிடப்பட்ட சாதனை மலரை மக்கள் பிரதிநிதிகளும், பொதுமக்களும் படித்து தெரிந்துகொள்ளலாம்.
தமிழக முதல்வா் ஆணைக்கிணங்க மாநிலத்திலேயே முன்மாதிரியாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்களைத் தேடி மனுக்கள் பெறும் முகாம் 10.03.2023 அன்று தொடங்கிவைக்கப்பட்டது. மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட 38 முகாம்கள் வாயிலாக பொதுமக்களிடமிருந்து 31,108 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் பல்வேறு நலத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது என்றாா்.
முன்னதாக, 11 அரசுத் துறைகளின் சாா்பில், 635 பயனாளிகளுக்கு ரூ.1.58 கோடி மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா். தொடா்ந்து, கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திலிருந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஏழை, எளிய மக்கள் செல்வதற்காக நகரப் பேருந்து வசதியை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் பெ.புவனேஷ்வரி பெருமாள், வேளாண் இணை இயக்குநா் சு.கருணாநிதி, கள்ளக்குறிச்சி ஒன்றியக்குழுத் தலைவா் அலமேலு ஆறுமுகம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.