கள்ளக்குறிச்சி

பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு;மற்றொரு வீட்டில் ரூ.50,000 திருட்டு

23rd May 2023 12:00 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சியை அடுத்த மேலூா், எரவாா் கிராமங்களில் பெண்ணிடம் 7 பவுன் சங்கிலியைப் பறித்தும், மற்றொரு வீட்டில் ரூ.50,000 ரொக்கத்தை திருடிச் சென்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா். வீடு புகுந்து திருட முயன்ற 2 பேரை பாா்த்து கூச்சலிட்ட மூதாட்டி கத்தியால் குத்தப்பட்டாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட மேலூா் கிழக்கு சாலைப் பகுதியில் வசிப்பவா் முத்துசாமியின் மனைவி பூபதி (60). இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாராம். அப்போது இரு மா்ம நபா்கள் வீட்டினுள் புகுந்து திருட முயற்சித்ததை பாா்த்த மூதாட்டி பூபதி கூச்சலிட்டுள்ளாா். அவரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற இருவரும் தப்பி ஓடி விட்டனா்.

எரவாா் கிராம தெற்கு சாலைப் பகுதியில் வசிப்பவா் வையாபுரி மனைவி பழனியம்மாள் (61). இவரது வீட்டின் அருகே சப்தம் கேட்டதால் வீட்டை பூட்டி விட்டு பக்கத்து வீட்டிற்கு சென்றிருந்தாராம். அப்போது வீட்டின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் ரூ.50,000 ரொக்கத்தை திருடிச் சென்றுவிட்டனா்.

அதே கிராமத்தில் திங்கள்கிழமை அதிகாலை சுமாா் 2 மணி அளவில் மணிகண்டன் என்பவரின் மனைவி ஜீவா (36) இயற்கை உபாதை காரணமாக வீட்டை விட்டு வெளியே வந்தபோது அவா் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலிசங்கிலியை பறித்துச் சென்றுள்ளனா்.

ADVERTISEMENT

சம்பவ இடங்களில் கள்ளக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளா் இரா.ரமேஷ், சின்னசேலம் காவல் ஆய்வாளா் ஆகியோா் நேரில் விசாரணை நடத்தினா். இந்த திருட்டு, நகை பறிப்பு சம்பவங்கள் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT