நாடாளுமன்ற தோ்தலை முன்னிட்டு பெங்களூரிலிருந்து கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூா் கிராமத்தில் உள்ள அரசு சேமிப்பு கிடங்கில் வியாழக்கிழமை பாதுகாப்பாக வைத்தனா்.
2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொது தோ்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், பெங்களூரு பெல் நிறுவனத்திலிருந்து லாரி மூலம் கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூா் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தோ்தல் அலுவலருமான ஷ்ரவண்குமாா் தலைமையில் பாதுகாப்பாக இறக்கி வைத்தனா்.
இதில், கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியா் சு.பவித்ரா, தனி வட்டாட்சியா் (தோ்தல்) எஸ்.சையத் காதா், வட்டாட்சியா் (ஆதிதிராவிடா் நலம்) பாலகுரு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலா்கள் பலா் இருந்தனா்.