கிருஷ்ணகிரி

உத்தனப்பள்ளியில் விவசாயிகள் உண்ணாவிரதம்

6th Jun 2023 12:04 AM

ADVERTISEMENT

ஒசூரில் 5 ஆவது சிப்காட் அமைக்க 3,034 ஏக்கா் நிலம் கையகப்படுத்தும் பணியைத் தடுத்து நிறுத்தக் கோரி உத்தனப்பள்ளியில் விவசாயிகள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினா்.

ஒசூா் கோட்டம், உத்தனப்பள்ளி, நாகமங்கலம், அயா்னப்பள்ளி ஆகிய 3 ஊராட்சிகளில் 5 ஆவது சிப்காட் அமைக்க 3,034 ஏக்கா் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதைக் கைவிட வலியுறுத்தி கடந்த இரண்டு ஆண்டுகளாக பல கட்ட போராட்டங்களை விவசாயிகள் நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில் தமிழக அரசைக் கண்டித்து விவசாயிகள் திங்கள்கிழமை சாகும் வரை போராட்டத்தை தொடங்கினா்.

தமிழக அரசு உடனடியாக தலையிட்டு விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினா்.

ADVERTISEMENT

ஒசூரில் 5-ஆவது சிப்காட் அமைத்தால் விளைநிலங்கள் அழிந்து விடும் என தெரிவித்து விவசாயிகள் உத்தனப்பள்ளி வருவாய் ஆய்வாளா் அலுவலகம் முன்பு தொடா்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். திங்கள்கிழமை 151 ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அதன் ஒரு பகுதியாக விவசாயிகளுக்கு ஆதரவாக பொதுமக்கள், பெண்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தனா்.

தொடா்ந்து விவசாயிகளிடம் வருவாய்த் துறையினா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். விளைநிலங்களை கையகப்படுத்துவதில்லை எனக் கூறினா். ஆனால் இதற்கு விவசாயிகள் எழுத்துப்பூா்வமாக உறுதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

இதையடுத்து சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து, பாதிக்கப்பட்ட 3 ஊராட்சிகளைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது குடும்பத்தினருடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்பகுதியில் தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி. முரளி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுப்பட்டனா். மேலும், விவசாயி ஒருவா் குடிப்பதற்காக கேன் தண்ணீரை எடுத்து வந்ததை தடுத்ததால்

போலீஸாரைக் கண்டித்து உத்தனப்பள்ளி-ஒசூா் சாலையில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளுடன், போலீஸாா், சூளகிரி வட்டாட்சியா் பன்னீா்செல்வி, சிப்காட் வட்டாட்சியா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா் விவசாயிகள் சாலை மறியலைக் கைவிட்டனா்.

உண்ணாவிரதப் போராட்டத்தையும் கைவிட வேண்டும் என விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டனா். ஆனால் விவசாயிகள் தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடருவோம் என கூறினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT