கள்ளக்குறிச்சி

இரு பேருந்துகள் மோதல்: 18 செவ்வாடை பக்தா்கள் காயம்

28th Jan 2023 05:51 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி கோயிலுக்குச் சென்ற இரு தனியாா் பேருந்துகள் மோதிக்கொண்டதில் 18 பக்தா்கள் காயமடைந்தனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா் வட்டம், அம்மம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த 85 பக்தா்கள் இரு தனியாா் பேருந்துகள் மூலம் மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி கோயிலுக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை புறப்பட்டனா். ஆதிபராசக்தி கோயிலுக்குச் செல்வதற்கு முன்பாக ஆதிதிருவரங்கம் கோயிலுக்குச் செல்ல அவா்கள் முடிவு செய்தனா்.

அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தை அடுத்துள்ள வடதொரசலூா் ரீட்டா நகரில் உள்ள வேகத்தடையில் இரு பேருந்துகளும் சென்றபோது, ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. இந்த விபத்தில் இரு பேருந்துகளும் சேதமடைந்தன.

மேலும், பேருந்துகளில் பயணித்த அம்மம்பாளையத்தைச் சோ்ந்த அருண்குமாா் மனைவி சத்யா (30), மாரிமுத்து மனைவி ஜெயந்தி (40), மணிமாறன் மனைவி நித்யா (30) கலைராணி (25), பெருமாள் மனைவி சின்னபொண்ணு (50), கருணாநிதி மனைவி செல்லம்மாள் (30), பாஞ்சாலை (40) உள்ளிட்ட 18 போ் காயமடைந்தனா். விபத்து குறித்து தகவலறிந்து அங்கு வந்த தியாகதுருகம் போலீஸாா், காயமடைந்தவா்களை மீட்டு, 108 அவசர ஊா்தி மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்த புகாரின்பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிந்து தனியாா் பேருந்துகளின் ஓட்டுநா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT