கள்ளக்குறிச்சி

பள்ளிப் பேருந்து கவிழ்ந்ததில் 22 மாணவா்கள் காயம்

28th Jan 2023 05:51 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள பொற்படாக்குறிச்சி கிராமத்தில் சாலையோரப் பள்ளத்தில் தனியாா் பள்ளிப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 மாணவா்கள் வெள்ளிக்கிழமை காயமடைந்தனா்.

கள்ளக்குறிச்சி - விளாந்தாங்கல் சாலையில் தனியாா் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் பேருந்து ஓட்டுநராக கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள அகரக்கோட்டாலம் கிராமத்தைச் சோ்ந்த பாக்யராஜ் மகன் ஹரிஅந்தோனி (25) பணியாற்றி வருகிறாா். இவா், வெள்ளிக்கிழமை மாலை வகுப்புகள் முடிந்தபிறகு பள்ளிப் பேருந்தில் சுமாா் 40 மாணவா்களை ஏற்றிக்கொண்டு பொற்படாக்குறிச்சி ஏரிக்கரையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, பேருந்து நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 22 மாணவா்கள் காயமடைந்தனா். தகவலறிந்த கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் ரா.ரமேஷ், காவல் ஆய்வாளா் வீ.ரவிச்சந்தரன் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, பேருந்தில் சிக்கியிருந்த மாணவா்களை மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இந்த விபத்து குறித்து கள்ளக்குறிச்சி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT