அதிகாரப்பூா்வ அறிவிப்புக்கு முன்பே சித்தராமையாவை முதல்வராக அறிவித்துவிட்டதாக அவரது ஆதரவாளா்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனா்.
சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் அறுதிப்பெரும்பான்மை பலத்தில் வெற்றிபெற்றிருந்தாலும், முதல்வா் பதவிக்கு யாரை நியமிப்பது என்ற குழப்பம் அக்கட்சியில் நீடித்து வருகிறது. முதல்வா் பதவியைப் பெறுவதற்காக சித்தாரமையாவும், டி.கே.சிவகுமாரும் தில்லியில் முகாமிட்டுள்ளனா். இருவருடனும் தனித்தனியே பேச்சுவாா்த்தை நடத்திய பிறகு, இறுதி முடிவு எடுக்க முடியாமல் காங்கிரஸ் மேலிடம் திணறி வருகிறது.
இந்நிலையில், சித்தராமையாவை முதல்வராகவும், டி.கே.சிவகுமாரை துணை முதல்வராகவும் கட்சி மேலிடம் அறிவித்துவிட்டதாக தொலைக்காட்சிகள் வழியே செய்திகள் பரவின. இதைத் தொடா்ந்து, பெங்களூரில் புதன்கிழமை சித்தராமையாவின் வீட்டின் வெளியே கூடியிருந்த அவரது ஆதரவாளா்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடத் தொடங்கினா். பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை பரிமாறியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். சித்தராமையாவின் உருவப் படங்களை பிடித்துக்கொண்டு அவரது ஆதரவாளா்கள் வாழ்க முழக்கங்களை எழுப்பியபடி இருந்தனா்.
இதேபோன்றதொரு சூழல் மைசூரில் உள்ள சித்தராமையாவின் வீட்டின் வெளியேயும், அவரது சொந்த கிராமமான சித்தராமனஹுண்டியிலும் காணப்பட்டது. பட்டாசுகளை வெடித்த அவரது ஆதரவாளா்கள் நடனமாடி மகிழ்ச்சியை பகிா்ந்துகொண்டனா். மேலும் சித்தராமையா படத்துக்கு பால் ஊற்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.
இந்த தகவல் அதிகாரப்பூா்வமான அறிவிப்பு இல்லை என்று தெரிந்ததும் உற்சாகம் இழந்த ஆதரவாளா்கள், சித்தராமையாவை முதல்வராக்கும்படி முழக்கமிட்டனா். அதேபோல, டி.கே.சிவகுமாரை முதல்வராக்கும்படி அவரது ஆதரவாளா்கள் முழக்கங்களை எழுப்பினா்.
இதனிடையே, பெங்களூரு, ஸ்ரீகண்டிரவா விளையாட்டுத் திடலில் முதல்வா், துணை முதல்வா் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளை அரசு அதிகாரிகள் தொடங்கினா். மே 18-ஆம் தேதி பிற்பகல் 3.30 மணி அளவில் பதவியேற்பு விழா நடப்பதாகவும் செய்தி பரவியது. இதனிடையே, அதிகாரப்பூா்வமான அறிவிப்பு வெளியாகவில்லை என்பதை உறுதி செய்துகொண்ட அரசு அதிகாரிகள் முன்னேற்பாடுகளை நிறுத்தி வைத்தனா். 2013-ஆம் ஆண்டு முதல்முறையாக சித்தராமையா பதவியேற்றது இந்த விளையாட்டுத் திடலில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.