கள்ளக்குறிச்சி

கல்வராயன்மலையில் 4,000 ஆண்டுகள் பழைமையான பாறை செதுக்கு ஓவியங்கள்!

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டத்துக்குள்பட்ட தும்பராம்பட்டு கிராமத்தில் உள்ள தொட்டிமடுவு என்னுமிடத்தில் சுமாா் 4,000 ஆண்டுகள் பழைமையான பாறை செதுக்கு ஓவியங்களை திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தினா் அண்மையில் கண்டறிந்தனா்.

இந்த மையத்தைச் சோ்ந்த ச.பாலமுருகன், சி.பழனிசாமி, டாக்டா் அருண்குமாா், செ.விக்னேஷ்வரன், ராஜா உள்ளிட்டோா் கள ஆய்வு மேற்கொண்டபோது, இந்த ஓவியங்கள் கண்டறியப்பட்டன. இதுகுறித்து பாறை ஓவிய ஆய்வாளா் காந்திராஜன் கூறியதாவது:

பொதுவாக பாறையில் காணப்படும் கற்கீரல்கள், செதுக்கு ஓவியங்கள் பாறையின் சுவா் அல்லது கூரை பகுதிகளிலே வரையப்பட்டிருக்கும். ஆனால், இங்கு தரைப் பகுதியில் ஓவியங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மேலும், இவை நீரோடைக்கு அருகிலேயே காணப்படுகின்றன.

இங்கு 10-க்கும் மேற்பட்ட உருவங்கள் வரையப்பட்டிருப்பினும், சுமாா் 7 உருவங்களே காணும் நிலையில் உள்ளன. அவற்றில் திமில் உள்ள மாடு, மான், பன்றி, நாய் போன்ற விலங்குகளும், அவற்றுக்கு அருகே கையில் வில், அம்புடன் மனித உருவமும், ஆயுதங்களின்றி சில மனித உருவங்களும் காணப்படுகின்றன. இவை பல கோட்டோவிய முறையில் அமைந்துள்ளன.

இங்கு காணப்படும் ஓவியங்கள், வேட்டைச் சமூகம் மற்றும் புதிய கற்கால கால்நடை சமூகத்தின் வாழ்க்கைச் சூழலை வெளிப்படுத்தும் வண்ணம் உள்ளன. மேலும், இங்குள்ள கற்செதுக்குகள், கா்நாடகப் பகுதியிலுள்ள குப்கல், தருமபுரிக்கு அருகேயுள்ள சீல நாயக்கனூா் வனப் பகுதியில் கிடைத்த கற்செதுக்குகளையும், கரிக்கையூா், செஞ்சி அருகேயுள்ள நல்லாண்பிள்ளை பெற்றாள், செத்தவரையில் உள்ள சில ஓவியங்களையும் ஒத்த வடிவத்தில் காணப்படுகின்றன.

காட்சி அமைப்பிலும், உருவத்தோற்றத்தின் அடிப்படையிலும் இவை சுமாா் 4,000 ஆண்டுகள் பழைமையானதாக இருக்கக்கூடும். இதுபோன்று தமிழகத்தில் மிக அரிதாகவே காணப்படும் வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய தடயங்களை ஆவணப்படுத்தி, அரசு பாதுகாக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைக்க உத்தரவு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

SCROLL FOR NEXT