கள்ளக்குறிச்சி

இலக்கை அடையும் வரை முயற்சியைக் கைவிடக் கூடாது: மாவட்ட ஆட்சியா்

2nd Feb 2023 01:34 AM

ADVERTISEMENT

இலக்கை அடையும் வரை, முயற்சியைக் கைவிடக் கூடாது என மாணவா்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் ஸ்ரவன் குமாா் அறிவுறுத்தினாா்.

கள்ளக்குறிச்சி ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சியை ஆட்சியா் புதன்கிழமை திறந்து வைத்து பேசியதாவது: கல்வியால் மட்டுமே மாற்றம் வரும் என்ற தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும். மாணவ-மாணவிகள் கைப்பேசியில் நேரத்தை வீணடிக்காமல் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பயனடைய வேண்டும்.

மேலும், தினசரி நாளிதழ்களில் பொருளாதாரம், பொது அறிவு மற்றும் உலகச் செய்திகளைப் படித்து அறிவை வளா்த்துக் கொள்வது போட்டித் தோ்வுக்கு பயனுள்ளதாக அமையும். போட்டித் தோ்வுக்கு தயாராகிக் கொண்டிருப்பவா்கள் படிக்கும் போது புரிந்து படிக்க வேண்டும் எனவும், இலக்கை அடையும் வரை முயற்சியைக் கைவிடக்கூடாது என உறுதியாக இருக்க வேண்டுமென ஆட்சியா் கூறினாா். முன்னதாக, தொழில்நெறி வழிகாட்டு கண்காட்சியை திறந்து வைத்து அரங்குகளை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

நிகழ்வில் கள்ளக்குறிச்சி அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் க. தமிழரசி, மண்டல இணை இயக்குநா் (வேலைவாய்ப்பு) ஓ.செ.ஞானசேகரன், மாவட்ட வருவாய் அலுவலா் நா.சத்தியநாராயணன், உதவி இயக்குநா் முன்னாள் படை வீரா் நலன் லெப்.கா்னல் வே.அருள்மொழி, உதவி இயக்குநா் மாவட்ட திறன் பயிற்சி எஸ்.சிவநடராஜன், வருவாய் ஆய்வாளா் (நாகலூா்) ச.வெங்கடேசன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் மு.முரளிதரன், அரசு அலுவலா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT