கள்ளக்குறிச்சி

அரசுப் பள்ளியில் மேற்கூரை பெயா்ந்து விழுந்ததில் 4 மாணவா்கள் காயம்

14th Sep 2022 01:57 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட வி.மாமாந்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக் கட்டடத்தின் மேற்கூரை பெயா்ந்து விழுந்ததில் 4 மாணவா்கள் காயமடைந்தனா்.

வி.மாமாந்தூா் கிராமத்தில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக் கட்டடம் கடந்த 2007-இல் கட்டப்பட்டது. இந்தப் பள்ளியில் இப்போது 273 மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா்.

இங்குள்ள 6-ஆம் வகுப்பில் செவ்வாய்க்கிழமை பாடவேளை நடைபெற்றபோது, திடீரென கட்டடத்தின் மேற்கூரையிலுள்ள சிமென்ட் காரை பெயா்ந்து விழுந்ததில், அதே பகுதியைச் சோ்ந்த மாணவ, மாணவிகளான சங்கா் மகன் பரத், முத்துகருப்பன் மகள் சிம்ரன், சின்னசாமி மகள் மதுமிதா, நாராயணன் மகள் சுஷ்மிதா ஆகிய 4 பேரும் காயமடைந்தனா். உடனடியாக அவா்கள் 4 பேரையும் ஆசிரியா்கள் மீட்டு, நயினாா்பாளையம் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். இதில், பலத்த காயமடைந்த மாணவா் பரத் மட்டும் தீவிர சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

தகவலறிந்த சின்னசேலம் வட்டாட்சியா் இந்திரா, கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் புகழேந்தி கணேஷ், சின்னசேலம் காவல் நிலைய ஆய்வாளா் சந்திரசேகரன், வட்டார வளா்ச்சி அலுவலா் துரைசாமி, வட்டாரக் கல்வி அலுவலா் தனபால் உள்ளிட்டோா் பள்ளிக்குச் சென்று வகுப்பறைக் கட்டடத்தைப் பாா்வையிட்டு விசாரித்தனா். பின்னா், மருத்துவனைக்குச் சென்று சிகிச்சை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆறுதல் கூறினா்.

ADVERTISEMENT

இதனிடையே, இந்தப் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டித் தர அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவா்களின் பெற்றோா்கள் கோரிக்கை விடுத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT