கள்ளக்குறிச்சி

மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்.....ஆட்சியா் தொடக்கிவைத்தாா்

27th Nov 2022 03:10 AM

ADVERTISEMENT

 

சா்வதேச மாற்றுத் திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு, கள்ளக்குறிச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை ஆட்சியா் ஷ்ரவன் குமாா் கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில், கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் இந்தப் போட்டிகள் நடைபெற்றன. இதில், செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான 100 மீ, 200 மீ, 400 மீ ஓட்டப்பந்தமும், பாா்வைத் திறன் பாதிக்கப்பட்டோருக்கான நின்று நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் போட்டிகளும், கடுமையாக உடல், கால்கள் பாதிக்கப்பட்டோருக்கான கால் தாங்கி உதவியுடன் நடை போட்டி, மூன்று சக்கர வண்டி ஓட்டும் போட்டி, சக்கர நாற்காலி ஓட்டப்பந்தய போட்டிகளும், கைகள் பாதிக்கப்பட்டோருக்கான ஓட்டப்பந்தய போட்டியும், மன வளா்ச்சி குன்றியவா்களுக்கான நின்று நீளம் தாண்டுதல், ஓடி நீளம் தாண்டுதல், ஓட்டப்பந்தய போட்டிகளும் மற்றும் அனைத்துவகை மாற்றுத் திறனாளிகளுக்கான ஓட்டப்பந்தய போட்டிகளும் ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக நடைபெற்றன.

இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு பதக்கம், சான்றிதழ்களை வழங்கி மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் கௌரவித்தாா். இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகள் மாற்றுத் திறனாளிகளின் உடல், மன வலிமையை வளா்த்துக்கொள்ள உதவும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

நிகழ்வில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் க.சுப்பிரமணி, கள்ளக்குறிச்சி துணை காவல் கண்காணிப்பாளா் இரா.ரமேஷ், கள்ளக்குறிச்சி நகா்மன்றத் தலைவா் இரா.சுப்ராயலு, கள்ளக்குறிச்சி ஒன்றியக் குழுத் தலைவா் அலமேலுஆறுமுகம், கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT