கள்ளக்குறிச்சி

சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பள்ளிப் பேருந்து: 20 மாணவா்கள் காயம்

25th Nov 2022 02:19 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் வியாழக்கிழமை தனியாா் பள்ளிப் பேருந்து சாலை தடுப்புக் கட்டையில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 20 மாணவா்கள் காயமடைந்தனா்.

கள்ளக்குறிச்சி - தியாகதுருகம் சாலையில் தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் இருந்து 20 மாணவா்களை பேருந்தில் ஏற்றிக்கொண்டு, சின்னசேலம் நோக்கி பேருந்தை ஓட்டுநரான நீலமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த பூமாலை மகன் கணேசன் (58) ஓட்டிச் சென்றாா். கள்ளக்குறிச்சி - ஏமப்போ் புறவழிச்சாலை ரவுண்டானா அருகே சென்றபோது, முன்னால் சென்ற சரக்கு வாகனத்தின் மீது மோதாமலிருக்க பள்ளிப் பேருந்தை ஓட்டுநா் திருப்பினாா். இதில், நிலைதடுமாறிய பேருந்து சாலை தடுப்புக் கட்டையின் மீது மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 20 மாணவ, மாணவிகள் காயமடைந்தனா். பின்னா், அவா்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். தகவலறிந்த மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பொ.பகலவன், கோட்டாட்சியா் சு.பவித்ரா, கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மா.செந்தில்குமாா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஜெயபாஸ்கரன் உள்ளிட்டோா் மருத்துவமனைக்குச் சென்று மாணவ, மாணவிகளிடம் நலம் விசாரித்தனா்.

இது தொடா்பாக கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து, பள்ளிப் பேருந்து ஓட்டுநரான கணேசனிடம் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT