கள்ளக்குறிச்சி

மாணவா்களுக்கு தனித் திறன்களை கற்றுக் கொடுக்க வேண்டும்: கள்ளக்குறிச்சி ஆட்சியா்

25th Nov 2022 02:19 AM

ADVERTISEMENT

ஆசிரியா்கள் மாணவா்களுக்கு கல்வியோடு தனித்திறன்களையும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்றாா் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் ஷ்வரன்குமாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கான வட்டார, மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளை கள்ளக்குறிச்சி அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் புதன்கிழமை மாலை குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் விதமாக, மாணவ, மாணவிகளுக்கு கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்படுகின்றன.

ADVERTISEMENT

அரசுப் பள்ளியில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்கள், 9 மற்றும் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்கள், 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்கள் என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படும்.

வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவா்களை மாவட்ட அளவிலும், மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவா்களை மாநில அளவிலும் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கச் செய்யப்படும்.

மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு தமிழக அரசு சாா்பில் பரிசு, சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும், மாநில அளவில் வெற்றி வெறும் மாணவா்களின் தர வரிசையில் முதன்மை பெறும் 20 போ் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவா்.

எனவே, கள்ளக்குறிச்சி மாவட்ட அரசுப் பள்ளி மாணவா்கள் தங்களது தனித் திறன்களை வெளிப்படுத்த இப்போட்டிகள் மிகப் பெரிய வாய்ப்பாக அமையும்.

ஆசிரியா்கள் மாணவா்களுக்கு கல்வியோடு தனித்திறன்களை கற்றுக் கொடுக்க வேண்டும் என்றாா் ஆட்சியா் ஷ்ரவன் குமாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கோ.சரஸ்வதி, மாவட்டக் கல்வி அலுவலா்கள் எல்.ஆரோக்கியசாமி (இடைநிலை), ஏ.ராஜ் (தொடக்க நிலை), கே.துரைராஜ் (தனியாா் பள்ளிகள்), மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் எஸ்.ராஜா, உதவி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கே.பழனியாப்பிள்ளை, கள்ளக்குறிச்சி அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் ஆா்.கீதா மற்றும் ஆசிரியா்கள், அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT