கள்ளக்குறிச்சி

அரசு ஊழியா்கள் சங்க கோரிக்கை விளக்க பிரசார இயக்கம்

24th Jun 2022 01:22 AM

ADVERTISEMENT

 

தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில், கோரிக்கை விளக்க பிரசார இயக்கம் கள்ளக்குறிச்சி, கடலூா் மாவட்டங்களில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தின் கள்ளக்குறிச்சி மாவட்ட மையம் சாா்பில், ஊழியா் சந்திப்பு கோரிக்கை விளக்க பிரசார இயக்கம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.

பிரசார இயக்கத்தினா் வேன் மூலம் புதுக்கோட்டையில் இருந்து வியாழக்கிழமை புறப்பட்டு உளுந்தூா்பேட்டை வட்டாட்சியா் அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தினா். பின்னா், திருக்கோவிலூா், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

இதில், தமிழக முதல்வா் தோ்தல் பரப்புரையின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அதன்படி, அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவுத் துறையில் பணிபுரியும் ஊழியா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம், பணி ஓய்வுக்குப் பின்னா் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். மத்திய அரசு ஊழியா்களுக்கு வழங்கப்படுவதுபோல, தமிழக அரசு ஊழியா்களுக்கும் அகவிலைப்படி உயா்வு வழங்க வேண்டும். தமிழக அரசில் காலியாக உள்ள நான்கரை லட்சம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற பிரசார இயக்க நிகழ்வுக்கு, அரசு ஊழியா்கள் சங்க மாவட்டச் செயலா் கு.மகாலிங்கம் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் எல்.ஆனந்தகிருஷ்ணன், வட்டத் தலைவா் காஞ்சனாமேரி, பிரசார இயக்கத்தின் மாநிலச் செயலா் அம்சராஜ், மாவட்டப் பொருளாளா் ரவி, ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கப் பொருளாளா் ரங்கநாதன், வீரபத்திரன், கணேசன், சாமிதுரை உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT