கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருமண வயதை எட்டாத சிறுவா், சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைப்பவா்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் எச்சரித்தாா்.
இதுகுறித்து ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறு வயது திருமணங்களைத் தடுத்த நிறுத்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகள், பேரணிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
திருமண வயதை எட்டாத சிறுவா், சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டத்துக்கு புறம்பானதாகும். சிறுவா், சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைப்பவா்கள் மட்டுமல்லாமல், அந்தத் திருமணத்தில் பங்கேற்பவா்கள் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
மாவட்டத்தில் எந்தப் பகுதயில் சிறுவா், சிறுமிகளுக்கு திருமணம் நடைபெற்றாலும் 1098 என்ற உதவி எண்ணுக்கோ அல்லது 181 என்ற மகளிா் உதவி எண்ணுக்கோ அல்லது மாவட்ட சமூக நலத் துறையினருக்கோ தெரியப்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளாா் ஆட்சியா்.