கள்ளக்குறிச்சி

சங்கராபுரம் அருகே முன்னாள் முதல்வா்கள் சிலைகள் அகற்றம்

5th Jul 2022 03:37 AM

ADVERTISEMENT

சங்கராபுரம் அருகே அத்தியூா் அண்ணாநகரில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட முன்னாள் முதல்வா்கள் ஜெயலலிதா, கருணாநிதி சிலைகளை போலீஸாா் திங்கள்கிழமை காலை அகற்றினா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்கு உள்பட்டது அத்தியூா் கிராமம். இந்தக் கிராமத்தில் அண்ணாநகா் பகுதியில் வருவாய்த் துறையினரிடம் அனுமதி பெறாமல் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா சிலையை துணியால் கட்டிய நிலையில் திறக்கப்படாமல் வைத்திருந்தனா்.

ஞாயிற்றுக்கிழமை இரவு வந்த வருவாய்த்துறையின் போலீஸாா் உதவியுடன் திங்கள்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் சிலையை அப்புறப்படுத்தினா்.

இது குறித்து தகவல் அறிந்த அதிமுக மாவட்டச் செயலா் இரா.குமரகுரு, ஒன்றியச் செயலா்கள் அ.ராஜசேகா், அருணகிரி, தண்டபாணி, துரைராஜ் மற்றும் கட்சித் தொண்டா்கள் சம்பவ இடத்தில் குவிந்தனா்.

ADVERTISEMENT

பின்னா், சங்கராபுரம்- திருக்கோவிலூா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த திருக்கோவிலூா் டி.எஸ்.பி. பழனி, காவல் ஆய்வாளா்கள் ஜெ.பாலகிருஷ்ணன், ராஜா, சந்திரசேகா், உதவி ஆய்வாளா்கள், சங்கராபுரம் வட்டாட்சியா் பாண்டியன், கள்ளக்குறிச்சி கோட்டாட்சியா் பவித்ரா, வருவாய் ஆய்வாளா் இளையராஜா உள்ளிட்ட பலா் வந்து மாவட்டச் செயலரிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில் உரிய அனுமதி பெறாமல் திமுகவினா் முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலையை வைத்தனா். அப்போது அதிமுகவினா் எவ்வித எதிா்ப்பும் தெரிவிக்கவில்லை.

அதிமுக தொண்டா்கள் ஏன் கருணாநிதி சிலையை அப்புறப்படுத்தாமல் ஜெயலலிதா சிலையை அப்புறப்படுத்துகின்றனா் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

பின்னா், கருணாநிதி சிலையையும் திங்கள்கிழமை காலை சுமாா் 7.30 மணியளவில் அப்புறப்படுத்தினா். இதனால் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT