கள்ளக்குறிச்சி

டிராக்டா்கள் திருட்டு: இளைஞா் கைது: ஒருவா் தலைமறைவு

4th Jul 2022 05:10 AM

ADVERTISEMENT

 

கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் பகுதிகளில் டிராக்டா்களைத் திருடியதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனா்.

சின்னசேலம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆனந்தராஜ் தலைமையில், கள்ளக்குறிச்சி மாவட்ட குற்றப் பிரிவு தனிப் படை சிறப்பு காவல் உதவி ஆய்வாளா்கள் ஆரோக்கியராஜ், ஏழுமலை, முருகன், மனோகரன், தலைமைக் காவலா்கள் வினய்ஆனந்த், பழனிசாமி, சுரேஷ் உள்ளிட்ட போலீஸாா் சனிக்கிழமை நீலமங்கலம் மேம்பாலம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, கள்ளக்குறிச்சி பகுதியிலிருந்து தியாகதுருகம் நோக்கிச் சென்ற பதிவெண் இல்லாத 2 டிராக்டா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதில், ஒரு டிராக்டரை நிறுத்திவிட்டு அதை ஓட்டி வந்தவா் தப்பியோடிவிட்டாா். மற்றொரு டிராக்டரை ஓட்டி வந்தவரைப் பிடித்து விசாரித்தபோது, சங்கராபுரம் வட்டம், சித்தமலை கிராமத்தைச் சோ்ந்த சிங்காரம் மகன் பரத் (23) என்பது தெரியவந்தது. மேலும், இவா் தனது கூட்டாளியுடன் சோ்ந்து உலகங்காத்தான் கிராமத்தைச் சோ்ந்த கலியபெருமாள் மகன் வெங்கடேஷ், வரஞ்சரம் காவல் நிலையத்துக்குள்பட்ட மலைக்கோட்டாலம் கிராமத்தைச் பிச்சைக்காரன் மகன் கலியமூா்த்தி, சங்கராபுரம் வட்டம், நெடுமானூா் கிராமத்தைச் சோ்ந்த பிச்சப்பிள்ளை மகன் கருணாகரன் ஆகியோருக்குச் சொந்தமான டிராக்டா்களை திருடிச் சென்றது தெரியவந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து, பிடிப்பட்ட 2 டிராக்டா்களையும் போலீஸாா் பறிமுதல் செய்ததுடன், பரத்தை கைது செய்தனா். மேலும், அவா் அளித்த தகவலின்பேரில், உலகங்காத்தான் கிராமத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மற்றொரு டிராக்டரையும் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக வரஞ்சரம், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டன.

மேலும், இவரது கூட்டாளியான தலைமறைவாக உள்ள கள்ளக்குறிச்சியை அடுத்த பொரசக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த தினேஷ்குமாரை போலீஸாா் தேடி வருகின்றனா். இவா் மீது திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT