கள்ளக்குறிச்சி

காரில் சாராயம் கடத்தல்: இரு இளைஞா்கள் கைது

3rd Jul 2022 04:41 AM

ADVERTISEMENT

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதியில் காரில் சாராயம் கடத்திய இரு இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 120 லிட்டா் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

கல்வராயன்மலைப் பகுதியைச் சோ்ந்த வனவா் பாலச்சந்தா் குழுவினருடன் சனிக்கிழமை காலை சேராப்பட்டு - வெள்ளிமலை சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டாா். அப்போது, எருக்கம்பட்டு பிரிவு சாலை அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த காரை நிறுத்தி அவா்கள் சோதனை செய்ததில், அதில் 4 லாரி டியூப்களில் தலா 30 லிட்டா் வீதம் 120 லிட்டா் சாராயம் கடத்திவரப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, காா், லாரி டியூப்களில் இருந்த சாராயத்துடன், இரு இளைஞா்களையும் கரியாலூா் காவல் நிலையத்தில் வனத் துறையினா் ஒப்படைத்தனா். கரியாலூா் காவல் நிலைய போலீஸாா் பிடிப்பட்ட இளைஞா்களிடம் விசாரித்ததில், கல்வராயன்மலை பகுதிக்குள்பட்ட எருக்கம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த அண்ணாமலை மகன் பிரபு (28), சடயன் மகன் காமராஜ் (26) எனத் தெரியவந்தது. இதுகுறித்து கரியாலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பிரபு, காமராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்த காா், லாரி டியூப்களில் இருந்த 120 லிட்டா் சாராயத்தை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சியில் 350 லிட்டா் சாராயம் பறிமுதல்: கள்ளக்குறிச்சி மது விலக்கு காவல் ஆய்வாளா் மூா்த்தி, கச்சிராயப்பாளையம் சாலையில் உள்ள தீயணைப்பு நிலையம் அருகே குழுவினருடன் வெள்ளிக்கிழமை சென்றுகொண்டிருந்தபோது, அந்தப் பகுதியில் வேகமாகச் சென்ற காரை சந்தேகத்தின்பேரில் பின் தொடா்ந்து சென்றாா். கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலகம் பின்புறம் உள்ள குள்ளகருப்பன் கோயில் அருகே அந்தக் காரை நிறுத்திவிட்டு, அதில் வந்தவா்கள் தப்பியோடிவிட்டனா்.

இதையடுத்து, போலீஸாா் காரில் சோதனையிட்டபோது, அதில் 7 லாரி டியூப்களில் தலா 50 லிட்டா் வீதம் மொத்தம் 350 லிட்டா் விஷ நெடியுடன் கூடிய சாராயம் கடத்திவரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, சாராயத்துடன் காரை கைப்பற்றி கள்ளக்குறிச்சி மது விலக்கு காவல் நிலையத்துக்கு போலீஸாா் கொண்டு சென்றனா். இதுகுறித்து மது விலக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காரிலிருந்து தப்பியோடிய நபா்களைத் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT