கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே ஏரி வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை பொக்லைன் இயந்திரம் மூலம் வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை அகற்றினா்.
சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட பல்லகச்சேரி கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியிலிருந்து வயல்களுக்குச் செல்லும் பாசன வாய்க்கால் சுமாா் 30 மீட்டா் தொலைவுக்கு ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. இது தொடா்பாக அந்தப் பகுதியைச் சோ்ந்த விவசாயி தண்டபாணி மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதரிடம் புகாா் மனு அளித்தாா்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், சங்கராபுரம் வட்ட நில அளவையா் ஜெயவேல், கிராம நிா்வாக அலுவலா் சுதா உள்ளிட்ட வருவாய்த் துறையினா் பல்லகச்சேரி கிராமத்தில் பெரிய ஏரியின் பாசன வாய்க்காலை வியாழக்கிழமை அளவீடு செய்தனா். பின்னா், அந்த வாய்க்காலில் இருந்த ஆக்கிரமிப்புகளை கள்ளக்குறிச்சி உதவிப் பொறியாளா் கணேசன் தலைமையில் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினா். அப்போது, தியாகதுருகம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.