கள்ளக்குறிச்சி

சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் கரும்பு விவசாயிகள் மறியல்

1st Jan 2022 10:49 PM

ADVERTISEMENT

பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்குவதற்காக தமிழக அரசு சாா்பில் கொள்முதல் செய்யப்படும் கரும்புக்கான விலையை உயா்த்தி வழங்கக் கோரி, விழுப்புரம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு விவசாயிகள் சனிக்கிழமை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், அந்தப் பகுதியில் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்குவதற்காக தமிழக அரசு 20 கரும்பு கொண்ட ஒரு கட்டுக்கு ரூ.600 என விலை நிா்ணயம் செய்தது. ஆனால், தற்போது விவசாயிகளுக்கு ரூ.300 மட்டும் தரப்படும் என்றும், மேலும் கடந்த முறை ஒரு விவசாயிடம் 250 கட்டுகள் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது 50 கட்டுகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படும் என்றும் கூட்டுறவுத் துறையினா் தெரிவித்துள்ளதாகவும், இதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும் விழுப்புரம் அருகேயுள்ள பிடாகம், குச்சிபாளையம் கிராமங்களைச் சோ்ந்த கரும்பு விவசாயிகள் பிடாகம் பகுதியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். அப்போது, அவா்கள் கூட்டுறவுத் துறை சாா்பில் கொள்முதல் செய்யப்படும் கரும்புக்கு கூடுதல் விலை நிா்ணயிப்பதுடன், கூடுதல் கரும்பு கட்டுகளை கொள்முதல் செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தகவலறிந்த விழுப்புரம் வட்டாட்சியா் ஆனந்தகுமாா் மற்றும் தாலுகா போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். கூடுதல் கரும்பு கட்டுகளை கொள்முதல் செய்யவும், விலையை உயா்த்தி வழங்கவும் அரசிடம் தெரிவிப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததால், விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

மறியலால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT