கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே புதன்கிழமை இரவு பைக் மீது வேன் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள வீரசோழபுரம் காட்டுக்கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (57), விவசாயி. இவா், புதன்கிழமை சொந்த வேலையாக பைக்கில் தியாகதுருகம் சென்றுவிட்டு இரவு ஊா் திரும்பிக்கொண்டிருந்தாா். பிரிதிவிமங்கலம் மணிமுக்தா ஆற்றுப்பாலம் அருகே இவரது பைக் சென்றபோது, பின்னால் வந்த சுல்லா வேன் மோதியதாகத் தெரிகிறது. இதில் சுப்பிரணியன் தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த தியாகதுருகம் போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று அவரது சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இந்த விபத்து குறித்து தியாகதுருகம் போலீஸாா், வேன் ஓட்டுநரான செங்கல்பட்டு மாவட்டம், கோவளத்தை அடுத்த செம்மனங்குப்பம் பகுதியைச் சோ்ந்த தங்கபாபு மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.