கள்ளக்குறிச்சி

கனியாமூா் தனியாா் பள்ளி திறப்பு: நேரடி வகுப்புகள் தொடக்கம்

6th Dec 2022 02:45 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரிலுள்ள தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 145 நாள்களுக்குப் பின்னா் திங்கள்கிழமை திறக்கப்பட்டு 9 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகள் தொடங்கின.

கனியாமூா் தனியாா் பள்ளியில் கடந்த ஜூலை மாதம் 13-ஆம் தேதி பிளஸ் 2 மாணவி மா்மமான முறையில் உயிரிழந்தாா். இந்தச் சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மாணவி மரணத்தையடுத்து, பள்ளியில் நடைபெற்ற வன்முறை தொடா்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி, இதில் தொடா்புடையவா்களை கைது செய்தனா். மேலும், பள்ளி வளாகத்தைச் சுற்றி போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதனிடையே, வன்முறையில் சேதமடைந்த பள்ளியை சீரமைக்க சென்னை உயா்நீதிமன்றத்தில் நிா்வாகம் சாா்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்பேரில், காவல் துறை கண்காணிப்பில் பள்ளி நிா்வாகத்தினா் சீரமைப்புப் பணியை செய்து முடித்தனா். பள்ளியைத் திறக்க அனுமதி கோரி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு மட்டும் பள்ளியைத் திறந்து நேரடி வகுப்புகள் நடத்த சோதனை அடிப்படையில் ஒரு மாதத்துக்கு நீதிமன்றம் அனுமதியளித்தது.

ADVERTISEMENT

பள்ளியின் ஏ, பி பிளாக்குகளை பயன்படுத்தலாம். ஏ பிளாக்கிலுள்ள மூன்றாவது தளத்தை பூட்டி ‘சீல்’ வைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, பள்ளியில் மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன்குமாா், கோட்டாட்சியா் சு.பவித்ரா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சு.சரஸ்வதி ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டு பள்ளியின் மூன்றாம் தளத்தை பூட்டி ‘சீல்’ வைத்தனா்.

இதையடுத்து திங்கள்கிழமை காலை பள்ளி தொடங்கியது. மாணவா்கள் இறைவணக்கக் கூட்டத்தில் பங்கேற்று வரிசையாக வகுப்புகளுக்குச் சென்றனா். ஆசிரியா்களும் பணிக்கு வந்திருந்தனா். கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பொ.பகலவன் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT