கள்ளக்குறிச்சி

விநாயகா் சதுா்த்தி: அரசின் நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

26th Aug 2022 01:15 AM

ADVERTISEMENT

 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழாவின் போது, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஆய்வுக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

விநாயகா் சதுா்த்தி விழாவினை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சட்டம் -ஒழுங்கை பராமரிப்பது தொடா்பாக ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சி.விஜய்பாபு தலைமையில், மாவட்ட எஸ்பி பொ.பகலவன் முன்னிலையில் புதன்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் விநாயகா் சிலை நிறுவ சாா்-ஆட்சியா், வருவாய் கோட்டாட்சியரிடம் தடையின்மை சான்று பெறவேண்டும்.

ADVERTISEMENT

நிலத்தின் உரிமையாளரிடமிருந்தும் தடையின்மைச் சான்று பெறவேண்டும். சிலை நிறுவ உள்ள இடம் அரசு இடமாக இருப்பின் சம்பந்தப்பட்ட துறையிடம் தடையின்மை சான்று பெறவேண்டும். ஒலி பெருக்கிக்கான அனுமதி காவல் துறையிடம் பெறவேண்டும்.

சிலைகள் தீ பாதுகாப்பு விதிகளின்படி நிறுவப்பட்டுள்ளன என தீயணைப்பு துறையினரின் சான்று பெற வேண்டும்.

விநாயகா் சிலைகளை களி மண்ணால் செய்ய வேண்டும்.

ரசாயன வா்ணம் பூசப்பட்ட மற்றும் பிளாஸ்டா் பாரீஸ் மூலம் செய்யப்பட்ட சிலைகளை பயன்படுத்தக்கூடாது.

சிலை நிறுவும் இடங்களில் முதலுதவி, மருத்துவ வசதிகள் இருப்பதை தொடா்புடைய அமைப்பாளா்கள் உறுதி செய்ய வேண்டும். சிலையின் உயரம் 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பயன்படுத்தக்கூடாது.

சிலை வைக்கும் இடங்களில் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாகவோ, சமுதாய அமைப்புகளின் தலைவா்களுக்கு ஆதரவாகவோ விளம்பரப் பதாகை வைக்கக்கூடாது.

விநாயகா் சிலைகள் நிறுவப்பட்ட இடங்கள், கரைக்கப்படும் இடங்கள், ஊா்வலம் செல்லும் பாதைகளில் பட்டாசு வெடிக்க அனுமதி கிடையாது. விநாயகா் சிலை ஊா்வலம் காவல் துறையினரால் அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களில் மட்டுமே நடைபெற வேண்டும்.

வழிபாட்டுக்குப் பிறகு விநாயகா் சிலைகளை ஆட்சியரால் நிா்ணயிக்கப்பட்ட இடங்களான சின்னசேலம் வட்டத்துக்கு உள்பட்ட அம்சாகுளம் ஏரி, கோமுகி அணை, சங்கராபுரம் வட்டத்துக்கு உள்பட்ட தியாகராஜபுரம் மணிமுக்தாறு, மணலூா்பேட்டை தென்பெண்ணையாறு, உளுந்தூா்பேட்டை வட்டத்துக்கு உள்பட்ட உ.கீரனூா் ஏரி, கள்ளக்குறிச்சி வட்டத்துக்கு உள்பட்ட விருகாவூா் ஏரி ஆகிய இடங்களில் கரைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நெறிமுறைகள் அறிவுறுத்தப்பட்டன.

கூட்டத்தில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) டி.சுரேஷ், மாவட்ட கூடுதல் எஸ்பி ஜீ.ஜவகா்லால், திருக்கோவிலூா் வருவாய் கோட்டாட்சியா் ஜெ.யோகஜோதி, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அலுவலா் எஸ்.சரவணன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) ரெ.ரெத்தினமாலா, மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளா் மு.சங்கவி உள்ளிட்ட அலுவலா்கள் மற்றும் காவல் துறையினா், விநாயகா் சதுா்த்தி விழா நடத்தும் அமைப்பினா் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT