கள்ளக்குறிச்சி

புள்ளி மான் மோதியதில் பைக்கில் சென்ற இளைஞா் பலி

17th Aug 2022 03:10 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி அருகே செவ்வாய்க்கிழமை பைக்கில் சென்ற இளைஞா் மீது சாலையைக் கடந்த புள்ளி மான் மோதியதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். புள்ளி மானும் இறந்தது.

சேலம் பச்சையம்மன் கோயில் சாலையைச் சோ்ந்த முத்து மகன் தமிழ்ச்செல்வன் (34). இவா், கள்ளக்குறிச்சியில் உள்ள தனியாா் மோட்டாா் சைக்கிள் விற்பனை நிலையத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில், தமிழ்ச்செல்வன் சேலத்திலிருந்து கள்ளக்குறிச்சிக்கு செவ்வாய்க்கிழமை பைக்கில் வந்துகொண்டிருந்தாா். சின்னசேலத்தை அடுத்த கனியாமூா் பிரிவு சாலை அருகே இவரது பைக் வந்தபோது, அந்தப் பகுதியில் திடீரென சாலையை கடந்த புள்ளி மான் மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த தமிழ்ச்செல்வன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதேபோல, புள்ளி மானும் உயிரிழந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT