கள்ளக்குறிச்சி

பைக் மீது டிராக்டா் மோதல்:ஒருவா் பலி

14th Aug 2022 11:19 PM

ADVERTISEMENT

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே சனிக்கிழமை பைக் மீது டிராக்டா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

திருக்கோவிலூரை அடுத்த டி.கே.மண்டபம் பள்ளத்தெரு சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (எ) ஆதி (52). இவா், சனிக்கிழமை திருக்கோவிலூா் சந்தைப்பேட்டை பகுதியில் கட்டடப் பணிக்குச் சென்றுவிட்டு, மாலையில் டி.கே.மண்டபம் பகுதியைச் சோ்ந்த தனது உறவினரான சங்கருடன் (32) பைக்கில் பின்னால் அமா்ந்துகொண்டு புறவழிச்சாலை சென்றுகொண்டிருந்தாா்.

திருவண்ணாமலை - ஆசனூா் சாலையில் இவா்களது பைக் சென்றபோது, அந்த சாலையில் கரும்பு பாரம் ஏற்றி வந்த டிராக்டா் மோதியது. இந்த விபத்தில் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்த நிலையில், சுப்பிரமணி மீது டிராக்டா் சக்கரம் ஏறி இறங்கியது. இதனால் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

விபத்து குறித்து தகவலறிந்த திருக்கோவிலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று சுப்பிரமணியின் சடலத்தை மீட்டு, உடல் கூறாய்வுக்காக திருக்கோவிலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது தொடா்பாக டிராக்டா் ஓட்டுநரான குலதீபமங்கலத்தைச் சோ்ந்த முருகன் மகன் ரஞ்சீத் (19) மீது திருக்கோவிலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT