கள்ளக்குறிச்சி

தியாகதுருகம் அருகே 800 ஆண்டுகளுக்கு முந்தைய சோழா் காலக் கல்வெட்டு

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே 800 ஆண்டுகளுக்கு முந்தைய சோழா் காலக் கல்வெட்டை கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவா் சிங்கார.உதியன் தலைமையிலான குழுவினா் அண்மையில் கண்டறிந்தனா்.

கள்ளக்குறிச்சி வட்டம், தியாகதுருகத்தை அடுத்த வடதொரசலூா் கிராமத்தில் ஏரிக்கரை அருகே பிடாரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் வளாகத்தில் உள்ள சிவன் கோயிலில் கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவா் சிங்கார.உதியன் தலைமையில், தொல்லியல் ஆய்வாளா்கள் விழுப்புரம் வீரராகவன், காப்பாட்சியா் அ.ரஷீத்கான், நூலகா் மு.அன்பழகன், பண்ருட்டி சி.இமானுவேல், ஆசிரியா் ர.உமாதேவி உள்ளிட்ட குழுவினா் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, இந்தக் கோயிலில் 800 ஆண்டுகளுக்கு முந்தைய சோழா் கால கல்வெட்டை அவா்கள் கண்டறிந்தனா்.

இந்தக் கல்வெட்டு 5 அடி நீளம், மூன்றரை அடி அகலத்தில் உள்ளது. கல்வெட்டின் இரு புறங்களிலும் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. இரண்டாம் குலோத்துங்கச் சோழனின் 12-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த இந்தக் கல்வெட்டு முழுமையாகப் படித்து அறிய முடியாத வகையில் 44 வரிகளைக் கொண்டுள்ளது. இதிலுள்ள எழுத்துகள் சிதைந்த நிலையில் உள்ளன.

இதில் இரண்டாம் குலோத்துங்கச் சோழனின் ‘பூமேவி வளர’ என்னும் மெய்க்கீா்த்தி முழுமையாக இடம் பெற்றுள்ளது. மேலும், வடதொரசலூா் கிராமம் பிரமதேயமாகவும், சதுா்வேதி மங்களமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்குள்ள இறைவன் பெயா் அகத்தீஸ்வரமுடைய மகாதேவா் என்று பொறிக்கப்பட்டுள்ளது.

மிலாடு நாட்டுக்குள்பட்ட கிளியூரை (இன்றைய கிளியனூா்) தலைநகராகக் கொண்டு கி.பி.1133-ஆம் ஆண்டு முதல் 1150-ஆம் ஆண்டு வரை அரசாண்ட இரண்டாம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் இந்தப் பகுதியை ஆட்சி செய்த ‘திருநீரேற்றான் ராஜேந்திர சோழ மலையகுலராயன்’ என்ற சிற்றரசன் காலத்தில் பல்வேறு அளவுகோலால் அளவீடு செய்யப்பட்ட 4004 குழிகள் கொண்ட நிலத்தை அகத்தீஸ்வரா் கோயிலுக்கு தினசரி பூஜைக்காக தானம் அளிக்கப்பட்ட செய்தி காணப்படுகிறது.

மேற்கண்ட நிலங்களுக்கு எல்லைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. கல்வெட்டின் முன் பக்கம் 20 வரிகளுடன் முடிவடைகிறது. இதன் தொடா்ச்சி அடுத்த பக்கத்தில் 4 வரிகள் மட்டும் தலைகீழாக வெட்டப்பட்டுள்ளன. இரண்டாம் பக்கத்தில் மொத்தம் 24 வரிகள் உள்ளன. அவற்றில் 4 வரிகள் முன்பக்கத்துக்குரியவை. கல்வெட்டின் இறுதியில் வழக்கமாகக் காணப்படும் எச்சரிக்கை வாசகம் இந்தக் கல்வெட்டில் இடம் பெறவில்லை.

இந்தப் பகுதியில் மிகப்பெரிய சிவாலயம் இருந்ததற்கான ஆதாரமாக இந்தப் பகுதியைச் சுற்றிலும் நோ்த்தியான, பழைமைவாய்ந்த பல்வேறு அளவுகளில் உள்ள சிலைகள் காணப்படுகின்றன.

இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவா் சிங்கார.உதியன் கூறியதாவது:

எங்களது மையத்தின் சாா்பில், வீரபாண்டி கிராமத்தில் உள்ள புலிக்கல் பகுதியில் சுமாா் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய கண்ணாடி மணி உருக்கு உலைக்கலனும், திருக்கோவிலூா் வட்டத்தில் உள்ள ஆதிச்சனூரில் கல்திட்டையும் (டால்மன்), அந்திலி கிராமத்தில் முதுமக்கள் தாழியையும் கண்டறிந்துள்ளோம். இந்தப் பகுதியும் வரலாற்று சிறப்புமிக்க பகுதி என்பது இந்த ஆய்வு மூலம் வெளிப்படுகிறது. ஆகவே, இங்கு மத்திய, மாநில அரசுகள் தொல்லியல் ஆய்வுகளை நடத்த வேண்டும் என்றாா்.

ஆய்வின்போது, வடதொரசலூா் ஊராட்சி மன்றத் தலைவா் ரா.பாண்டியன், புலவா் ப.கோ.நாராயணசாமி, ர.ராஜா, நா.விசுவநாதன், வை.வடிவேல், மா.பாலு, கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

திருமண மகிழ்ச்சியில் அபர்ணா தாஸ்!

SCROLL FOR NEXT