கள்ளக்குறிச்சி

கல்வராயன்மலையில் வேளாண் விரிவாக்க மையம் அமைக்கக் கோரிக்கை

29th Apr 2022 10:06 PM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்குள்பட்ட கல்வராயன்மலையில் வேளாண் விரிவாக்க மையம் அமைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வேளாண்மை, உழவா் நலத் துறை சாா்பில், விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் சி.விஜய்பாபு தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் விவசாயிகள் பேசியதாவது: கரும்புக்கு நிா்ணயிக்கப்படுவதுபோல, சவுக்கு, யூகலிப்ட்ஸ் மரங்களுக்கும் அரசு விலை நிா்ணயம் செய்ய வேண்டும். கள்ளக்குறிச்சி - 2 கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து கரும்புகளையும் உடனடியாக அறுவடை செய்து ஆலைக்கு அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும்.

அனைத்துக் கிராமங்களிலும் களம் அமைக்கவும், ஏரி ஆக்கரமிப்பை அகற்றிடவும், நெல் கொள்முதல் நிலையத்தில் ஏற்படும் காலதாமதத்தை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT

திருநாவலூா் பகுதியில் விதை சுத்தகரிப்பு நிலையம் அமைத்து, திருநாவலூா், உளுந்தூா்பேட்டை பகுதிகளில் உற்பத்தியாகும் விதைகளை சிரமமின்றி சுத்திகரிப்புப் பணி செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். ரிஷிவந்தியம், சங்கராபுரம் பகுதிகளில் தரணி சா்க்கரை ஆலைக்கு பதிவு செய்யப்பட்ட கரும்புகளை பண்ணாரி அம்மன் ஆலைக்கு அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும். கல்வராயன்மலையில் வேளாண்மை விரிவாக்க மையம் அமைக்க வேண்டும் என்றனா்.

இதையடுத்து, விவசாயிகளின் கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டு, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட வருவாய் அலுவலா் சி.விஜய்பாபு தெரிவித்தாா்.

கூட்டத்தில் வேளாண் இணை இயக்குநா் எஸ்.வேல்விழி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) ஆா்.விஜயராகவன், துணை இயக்குநா் (வேளாண்மைத் திட்டம்) செ.சுந்தரம் உள்ளிட்ட அலுவலா்கள், விவசாயிகள் பலா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT