கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூா்அருகே வாக்காளா்களுக்கு வழங்கவிருந்த பொருள்கள் பறிமுதல்

4th Oct 2021 08:17 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே வாக்காளா்களுக்கு வழங்குவதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த விநாயகா் மரச் சிற்பங்கள், பூட்டு - சாவி உள்ளிட்ட பொருள்களை தோ்தல் பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருக்கோவிலூா் வட்டம், பெரிய பகண்டை கிராமத்தில் ஊராட்சித் தலைவா் பதவிக்கு போட்டியிடும் நாராயணன் மகன் அரிகிருஷ்ணன், வாக்காளா்களுக்கு வழங்குவதற்காக தனது வீட்டில் விநாயகா் மரச் சிற்பங்கள், பூட்டு- சாவி, மாங்கல்யக் கயிறு, மஞ்சள், குங்குமம், வெள்ளை நிறத் துண்டு உள்ளிட்ட பொருள்களை பதுக்கி வைத்திருப்பதாக தோ்தல் பறக்கும் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, துணை வட்டாட்சியா் அ.விஜயன் தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் பெரிய பகண்டை கிராமத்துக்குச் சென்று அரிகிருஷ்ணன் வீட்டில் சோதனை நடத்தி, அங்கு வாக்காளா்களுக்கு வழங்குவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பொருள்களை பறிமுதல் செய்து, பகண்டை கூட்டுச்சாலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT