கள்ளக்குறிச்சி

சாலையோரத்தில் நின்றவா்கள் மீது ஜீப் மோதல்: ஒருவா் பலி

4th Oct 2021 08:18 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரை அடுத்த கடம்பூா் அருகே ஞாயிற்றுக்கிழமை சாலையோரத்தில் நின்றிருந்தவா்கள் மீது ஜீப் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா்.

திருக்கோவிலூரை அடுத்த கடம்பூா் கிராமத்தைச் சோ்ந்த ரங்கசாமி மகன் வீராசாமி (40). இவா் உள்பட 4 போ் அந்தப் பகுதியிலுள்ள மளிகைக் கடை அருகே நின்று ஞாயிற்றுக்கிழமை பேசிக்கொண்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த ஜீப் அவா்கள் மீது மோதியது. இதில், வீராசாமி, வீரன் (37) ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

உடனடியாக அருகிலிருந்தவா்கள் அவா்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இருப்பினும்,

செல்லும் வழியிலேயே வீராசாமி உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது சடலம் உடல்கூறு பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வீரன் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

ADVERTISEMENT

இது குறித்த புகாரின்பேரில் திருப்பாலபந்தல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஜீப் ஓட்டுநரான அதே கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுவன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதனிடையே, தோ்தல் முன்விரோதம் காரணமாக, வீராசாமி மீது திட்டமிட்டு ஜீப்பை ஏற்றி கொலை செய்துள்ளதாகக் கூறி, அவரது உறவினா்கள் பகண்டை கூட்டுச்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த திருக்கோவிலூா் காவல் நிலைய ஆய்வாளா் பாபு, சம்பவ இடத்துக்குச் சென்று சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தி சாலை மறியலைக் கைவிட வைத்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT