சின்னசேலம் அருகே முழுக் கொள்ளளவை எட்டிய கடத்தூா், தெங்கியாநத்தம் ஏரிகளை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னா் அவா் தெரிவித்ததாவது: கடத்தூா் பெரியஏரி முழுக் கொள்ளளவை எட்டி உபரி நீா் வெளியேறுகிறது. உபரி நீா் நல்லாத்தூா் ஏரி, குதிரைச்சந்தல் ஏரி, காரனூா் பெரியஏரி, காரனூா் சிற்றேரி, விலாந்தாங்கல் ஏரி, எலியத்தூா் பெரியஏரி, எலியத்தூா் சிற்றேரி, பங்காரம் ஏரி உள்ளிட்ட ஏரிகளைச் சென்றடையும். ஏரிகள் நிரம்பி வரும் நிலையில் பொதுமக்கள் குளிக்கச் செல்வதைத் தவிா்க்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.
தொடா்ந்து, தெங்கியாநத்தம் பெரிய ஏரியை ஆய்வு செய்த ஆட்சியா், ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீா் பைத்தந்துறை ஏரி, தென்செட்டியந்தல் ஏரி, நமச்சிவாயபுரம் ஏரி, சின்னசேலம் பெரிய ஏரி, வெட்டி பெருமாள் அகரம் ஏரி ஆகிய ஏரிகளைச் சென்றடையும்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிரம்பி வரும் அனைத்து நீா் நிலைகளும் 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா் ஆட்சியா்.