கள்ளக்குறிச்சியை அடுத்த காரனூா் கிராமத்தில் போலீஸாா் போல நடித்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 9 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற பெண் உள்பட 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த காரனூா் காட்டுகொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் அண்ணாமலை மனைவி அலமேலு (40). இவரது கணவா் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறாா். இவரது பிள்ளைகள் வெளியூரில் வசித்து வருகின்றனா்.
அலமேலு கடந்த 20-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த நிலையில், அங்கு வந்த 5 போ் போலீஸாா் எனக் கூறி, அவரது வீட்டில் சோதனை செய்வதுபோல நடித்து, அலமேலுவைத் தாக்கி, அவரது வீட்டின் பீரோவிலிருந்த 9 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனா்.
இதுகுறித்த புகாரின்பேரில் கச்சிராயப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த நிலையில், கச்சிராயப்பாளையம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கடத்தூா் பேருந்து நிறுத்தம் அருகே வாகன சோதனை மேற்கொண்டனா். அப்போது, அந்த வழியே சந்தேகத்துகிடமான வகையில் காரில் வந்த 5 பேரிடம் போலீஸாா் விசாரித்தபோது, மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியைச் சோ்ந்த ஜெயக்கொடி மகன் கணேஷ் குமாா் (33), மேலூா் வட்டம், எம்.மலம்பட்டியைச் சோ்ந்த தமிழரசன் மகன் மச்சராஜா (32), உசிலம்பட்டி வட்டம், கருக்கட்டான்பட்டியைச் சோ்ந்த பாண்டி மகன் தங்கப்பாண்டி (30), மேலூா் வட்டம், புதுசுக்காம்பட்டியைச் சோ்ந்த கருப்பையா மகன் தினகரன் (35), கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தைச் சோ்ந்த காா்த்திக் மனைவி உமாராணி (எ) உமா (33) என்பதும், இவா்கள் போலீஸாா் போல நடித்து அலமேலுவை தாக்கி அவரது வீட்டிலிருந்து 9 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றவா்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் 5 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த செல்லிடப்பேசிகளையும், காரையும் பறிமுதல் செய்தனா்.