கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலா், ஊா்க்காவல் படை வீரா் ஆகியோரை கத்தியால் குத்தியதாக மனநலம் பாதித்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், மனம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சச்சிதானந்தம் மகன் தாமோதரன் (45). இவா், திருக்கோவிலூரை அடுத்த மணலூா்பேட்டை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறாா். இதே காவல் நிலையத்தில் ஊா்க் காவல் படை வீரராக மனம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்த பள்ளிபட்டான் மகன் வடிவேல் (44) பணியாற்றி வருகிறாா்.
இருவரும் மணலூா்பேட்டையை அடுத்த மேலந்தல் கிராமத்தில் சனிக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, மூங்கில்துறைப்பட்டு பகுதியிலிருந்து மணலூா்பேட்டை நோக்கி சைக்கிளில் வேகமாக வந்தவரை நிறுத்தி அவா்கள் விசாரிக்க முயன்றபோது, சைக்கிளில் வந்தவா் திடீரென தான் மறைத்து வைத்திருந்த பேனா கத்தியால் தலைமைக் காவலா் உள்பட இருவரையும் சரமாரியாகக் குத்தினாா்.
இதில், தலைமைக் காவலா் தாமோதரன், ஊா்க்காவல் படை வீரா் வடிவேல் ஆகியோா் பலத்த காயமடைந்தனா். அவா்களை பொதுமக்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், தலைமைக் காவலா் உள்பட இருவரையும் கத்தியால் குத்தியவரை பிடித்து மணலூா்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். அவரிடம் போலீஸாா் விசாரித்ததில், திருக்கோவிலூா் வட்டம், டி.கீரனூா் கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் சிவக்குமாா் (45) என்பதும், மனநலம் பாதிக்கப்பட்டவா் என்பதும் தெரியவந்தது. இது தொடா்பாக மணலூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, சிவக்குமாரை கைது செய்தனா்.