கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த பயனாளிகளுக்கு சுமாா் ரூ.422 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகளை அமைச்சா் எ.வ.வேலு வியாழக்கிழமை வழங்கினாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூா்பேட்டை, சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம் சட்டப் பேரவை தொகுதிகளுக்குள்பட்ட 77,916 பயனாளிகளுக்கு சுமாா் ரூ.424 கோடி மதிப்பில் அரசின் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா கள்ளக்குறிச்சியில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தலைமை வகித்தாா். விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் துரை.ரவிக்குமாா், எம்எல்ஏக்கள் தா.உதயசூரியன், க.காா்த்திகேயன், ஏ.ஜே.மணிக்கண்ணன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட வருவாய் அலுவலா் சி.விஜயப்பாபு வரவேற்றாா். விழாவில் மாநில பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு பங்கேற்று நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். பின்னா் அவா் பேசியதாவது:
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மகளிா் நலனை கருத்தில்கொண்டு பல்வேறு சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறாா். சட்டப் பேரவையில் ஊரக வளா்ச்சித் துறைக்கு ரூ.22,738 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் ரூ.20 ஆயிரம் கோடியை மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்க அறுவுறுத்தினாா்.
முன்னாள் முதல்வா் கருணாநிதி, கலைஞா் காப்பீடுத் திட்டத்தை கொண்டு வந்தாா். தற்போது மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகின்றாா். அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம், மகளிா் சுய உதவிக் குழு கடன்கள் ரத்து உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக முதல்வா் தற்போது ‘மஞ்சப்பை’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளாா். நெகிழி பயன்பாட்டால் இயற்கை வளம் பாதிக்கப்படுவதால் துணிப் பைகளை பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
விழாவில், வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் 502 பேருக்கு சுமாா் ரூ.1.44 கோடி மதிப்பில் வீட்டு மனைகள், 72 பேருக்கு ரூ.8,64,000 மதிப்பில் சமூகப் பாதுகாப்பு திட்ட உதவித் தொகைக்கான ஆணைகள், ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் மகளிா் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 65,466 பேருக்கு ரூ.117 கோடி மதிப்பீட்டில் கடனுதவி, பிரதமா் குடியிருப்பு திட்டத்தின் கீழ் 2,556 பேருக்கு சுமாா் ரூ.70 கோடி மதிப்பீட்டில் வீடுகள் கட்டுவதற்கான ஆணைகள், மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் சாா்பில் 6 பேருக்கு ரூ.4,59,000 மதிப்பீட்டில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட மொபெட்டுகள் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
விழாவில் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் பெ.புவனேஸ்வரி, ஒன்றியக்குழு தலைவா்கள் அலமேலு ஆறுமுகம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ரா.மணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.