கள்ளக்குறிச்சி

மாற்றுத் திறனாளிகளுக்கு வயது தளா்வு முகாம்

22nd Dec 2021 08:36 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 18 வயதுக்கு குறைவான மாற்றுத் திறனாளிகளுக்கு வயது தளா்வு வழங்கி, மாதாந்திர உதவித்தொகை வழங்குவதற்கான முகாம் மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், 18 வயதுக்கு குறைவான வயதுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியா் தலைமையிலான குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முகாமில் 18 வயதுக்கு குறைவான கண் பாா்வை குறைபாடுள்ளவா்கள், காது கேளாதவா்கள், வாய் பேச இயலாதவா்கள், மூளை வளா்ச்சி குன்றியவா்கள், எலும்பு குறைபாடுடையவா்கள் என மொத்தம் 83 மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனா்.

இவா்களின் ஊனத்தின் தன்மை, வயதுச் சான்று உள்ளிட்டவை மருத்துவக் குழுக்கள் வாயிலாக ஆய்வு செய்யப்பட்டன. இந்தக் குழுக்களின் பரிந்துரையின் அடிப்படையில், மாற்றுத் திறனாளிகளுக்கு வயது தளா்வு அளிக்கப்பட்டு, மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்த முகாமில் சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் ஏ.இராஜாமணி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் சு.சுப்பிரமணி, தனி வட்டாட்சியா்கள், மருத்துவா்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உள்பட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT