கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

16th Dec 2021 08:46 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சியை அடுத்த விருகாவூா் கிராமத்தில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகள், வீடுகளை நெடுஞ்சாலைத் துறையினா் பொக்லைன் இயந்திரம் மூலம் புதன்கிழமை இடித்து அகற்றினா்.

கள்ளக்குறிச்சி - கூத்தக்குடி சாலையில் விருகாவூா் கிராமத்தில் சாலையின் இரு புறமும் ஆக்கிரமித்து சுமாா் 100 வீடுகள், கடைகளை கட்டியிருந்தனா். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

இதையடுத்து, வருவாய்த் துறையினா் கடந்தாண்டு சாலையை அளவீடு செய்து ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள், கடைகளில் பெயின்டால் குறியீடு செய்து, சொந்தச் செலவில் அகற்றிக்கொள்ள வேண்டுமென நோட்டீஸ் வழங்கினா். ஆனால், யாரும் இதுவரையில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அப்படியே இருந்து வந்தனா்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் ராஜ்குமாா் தலைமையில், கள்ளக்குறிச்சி உதவிக் கோட்ட பொறியாளா் ஜெ.மணிமொழி, கள்ளக்குறிச்சி வட்டாட்சியா் விஜய பிரபாகரன், நெடுஞ்சாலைத் துறை வருவாய் ஆய்வாளா் விஜயா, வருவாய்த் துறை ஆய்வாளா் பாலு உள்ளிட்டோா் முன்னிலையில், கள்ளக்குறிச்சி - கூத்தக்குடி சாலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள், கடைகளை பொக்லைன் இயந்திரம் மூலம் புதன்கிழமை இடித்து அகற்றினா்.

ADVERTISEMENT

அப்போது, கள்ளக்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளா் ச.முருகேசன் தலைமையிலான சுமாா் 25-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். அவா்கள் கடைகள், வீடுகளை இடித்து அகற்றுவதற்கு ஆட்சேபம் தெரிவித்தவா்களை அப்புறப்படுத்தினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT