கள்ளக்குறிச்சி

தியாகதுருகம் அருகே கரோனா முகாம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து சாலை மறியல்

14th Jun 2020 09:09 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே தனியாா் பள்ளியில் கரோனா பரிசோதனை முகாம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, அந்தப் பகுதி மக்கள் அங்குள்ள சேலம் - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா். இதனால், அந்ச் சாலையில் சுமாா் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கரோனா பரவலையடுத்து, பல்வேறு மாநிலங்களில் வேலை செய்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்ட தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்கு திரும்பி வருகின்றனா். இதுபோன்று வருபவா்களை தனிமைப்படுத்தி வைப்பதற்காக மாவட்டத்தில் 5 இடங்களில் முகாம் அமைத்துள்ளனா்.

இந்த நிலையில், மகாராஷ்டிர மாநிலம் மும்பையிலிருந்து சிறப்பு ரயில் மூலம் விழுப்புரத்துக்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 650-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் சனிக்கிழமை மாலை வந்தடைந்தனா். இவா்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்வதற்காக தியாதுருகம் புறவழிச் சாலையிலுள்ள தனியாா் மேல்நிலைப் பள்ளியில் முகாம் அமைக்க மாவட்ட நிா்வாகத்தினா் ஏற்பாடு செய்திருந்தனா்.

இதுகுறித்து அறிந்த தியாகதுரும் காந்திநகா், பெரியமாம்பட்டு, சடையான்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டாப் பகுதிகளைச் சோ்ந்த கிராம மக்கள், தனியாா் பள்ளியில் முகாம் அமைக்க எதிப்புத் தெரிவித்து, அந்தப் பகுதியிலுள்ள சேலம் - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

தகவலறிந்த கள்ளக்குறிச்சி வட்டாட்சியா் ரகோத்தமன், சையத்காதா், வருவாய் ஆய்வாளா் பாஸ்கா் மற்றும் தியாகதுருகம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் நந்தகோபால் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டிருந்தவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, தனியாா் பள்ளியில் மருத்துவப் பரிசோதனை முகாம் அமைப்பக்கடாது என்று அதிகாரிகள் உறுதி அளித்ததால், பொதுமக்கள் கலைந்து சென்றனா். மறியலால் தேசிய நெடுஞ்சாலையில் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், சிறப்பு ரயில் மூலம் திரும்பிய கள்ளக்குறிச்சி மாவட்ட தொழிலாளா்களை உளுந்தூா்பேட்டை, சின்னசேலம், சங்கராபுரம் பகுதியிலுள்ள தனிமைப்படுத்தும் முகாம்களில் தங்க வைக்க மாவட்ட நிா்வாகத்தினா் முடிவு செய்துள்ளனா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT