கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அருகே சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் விவசாயிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
ரிஷிவந்தியம் அருகேயுள்ள காட்டுஎடையாா் கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் ராஜேந்திரன்(40). இவரது மகள் ராஜேஸ்வரி (14), மகன்கள் ராஜேஷ்குமாா்(12), சந்தோஷ் (10).
ராஜேந்திரனுக்கும், விவசாயியான அவரது தம்பி பாண்டியனுக்கும் (36) இடையே குடும்பத் தகராறு இருந்து வந்தது. கடந்த 2015-ஆம் ஆண்டு, பிப்ரவரி 10-ஆம் தேதி கடைக்குச் சென்ற சிறுவன் சந்தோஷை, பாண்டியன் அரிவாளால் வெட்டியதில் அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து ரிஷிவந்தியம் போலீஸாா் வழக்குப் பதிந்து பாண்டியனைக் கைது செய்து விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா்.
விழுப்புரம் மாவட்ட கூடுதல் முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செங்கமல செல்வன் திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். குற்றம்சாட்டப்பட்ட பாண்டியனுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.
இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் வேலவன் ஆஜரானாா்.